‘சிக்மா’ படத்தின் வெற்றிக்கு சஞ்சய்தான் முதல் காரணம் – சந்தீப் கிஷன்!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு சேலத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய லைகா புரொடக்‌ஷன்ஸ் தமிழ் குமரன், ‘சிக்மா’ திரைப்படம் ஜேசன் சஞ்சய்க்கும் தங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கும் முக்கியமான படம் எனக் குறிப்பிட்டார். ஜேசன் சஞ்சய் படத்தின் மேக்கிங்கில் சிறப்பாக பணியாற்றியுள்ளதாக பாராட்டிய அவர், ‘சிக்மா’ ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், ‘கோலமாவு கோகிலா’ மூலம் நெல்சனையும், ‘டான்’ படத்தின் மூலம் சிபி சக்கரவர்த்தியையும் இயக்குநர்களாக அறிமுகப்படுத்தியதை குறிப்பிட்ட தமிழ் குமரன், ஜேசன் சஞ்சயும் எதிர்காலத்தில் பெரிய உயரத்தை அடைவார் என வாழ்த்து தெரிவித்தார்.

நடிகை ஃபரியா அப்துல்லா பேசுகையில், ‘சிக்மா’ தனக்கு மிகவும் ஸ்பெஷலான படம் என்றும், ஜேசன் சஞ்சய்க்கு சினிமா மற்றும் ஃபிலிம் மேக்கிங் மீது அதிக ஆர்வம் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், சந்தீப் கிஷனை இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரசிகர்கள் பார்க்க உள்ளதாகவும் கூறினார்.

- Advertisement -

பாடலாசிரியர் சூப்பர் சுப்பு, ஜேசன் சஞ்சய் தனக்கு தேவையான விஷயங்களை பொறுமையாக எடுத்துச் சொல்லி சிறப்பாக பணியாற்றியதாக பாராட்டினார். ‘சிக்மா’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த அவர், எதிர்காலத்தில் ஜேசன் சஞ்சய் நடிகராகவும் அறிமுகமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் சந்தீப் கிஷன், தன்னை நம்பி இப்படத்தில் வாய்ப்பு வழங்கிய ஜேசன் சஞ்சய்க்கு நன்றி தெரிவித்தார். ‘சிக்மா’ மிகவும் ஜாலியான ஜென்ஸீ திரைப்படம் எனக் குறிப்பிட்ட அவர், தங்கள் படக்குழுவினர் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியுள்ளதாக தெரிவித்தார். மேலும், ரசிகர்களுக்கும் இப்படம் நிச்சயம் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேசுகையில், சேலத்தில் இருந்து ‘சிக்மா’ படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்குவது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். இப்படத்திற்காக சேலத்தில் சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதால், அங்கு பல அழகான நினைவுகள் இருப்பதாகவும் கூறினார்.

தனது முதல் படமான ‘சிக்மா’ வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது என்று குறிப்பிட்ட ஜேசன் சஞ்சய், “நம் வாழ்வில் கடினமான தருணங்களில் இருந்து மீண்டு வர நாம் எடுக்கும் ஒரு முடிவு, வாழ்க்கையையே மாற்றும். அதுதான் ‘சிக்மா’” என படத்தின் மையக்கருத்தை விளக்கினார்.

சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

jason sanjaySanjay Is the First Reason Behind ‘Sigma’s’ Success – Sundeep KishanSigmaSundeep Kishan