தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலகில் தனக்கென அழியாத தடம் பதித்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் அரசியல், திரைத்துறை, கல்வி, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, அவரது வாழ்க்கை, அரசியல் பயணம் மற்றும் திரைத்துறைக்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர்.
பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கியபோது அவருடன் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவைகளில் இடம்பெற்ற அவர், 1977 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் ஐந்து முறை தமிழக அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். மேலும், மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
அரசியலுடன் இணைந்து திரைத்துறையிலும் தனது தனித்துவமான பங்களிப்பைச் செய்தவர் ஆர்.எம்.வீரப்பன். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்ததுடன், 20-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இதனால் திரையுலகில் அவர் ‘திரைக்கதை சித்தர்’ என அன்புடன் அழைக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி பல தலைமுறை தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன் பயணித்த ஆர்.எம்.வீரப்பன், ‘ரிக்ஷாக்காரன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘தெய்வத் தாய்’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கிய அவர், ரஜினிகாந்த் நடித்த ‘மூன்று முகம்’, ‘பாட்ஷா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களையும் தயாரித்துள்ளார்.
ஆர்.எம்.வீரப்பனின் மருமகனான டி.ஜி.தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராக தொடர்ந்து திரைத்துறையில் பயணித்து வருகிறார். எம்.ஜி.ஆர். காலம் முதல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களைத் தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ், வணிக வெற்றியுடன் தரமான படைப்புகளையும் வழங்கி வருகிறது.
இந்தப் பின்னணியில் நடைபெற்ற ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழாவை டி.ஜி.தியாகராஜன் முன்னின்று ஒருங்கிணைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று உரையாற்றிய அவர், ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் பயணம், திரைத்துறை பங்களிப்பு, தனிப்பட்ட பண்புகள் மற்றும் வாழ்க்கை நெறிகளை நினைவுகூர்ந்தார்.
- Advertisement -
விழாவில் பேசிய சென்னை கம்பன் கழகத் தலைவரும் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன், “அரசியலில் ஆர்.எம்.வீ. போல் தூய்மையானவரைப் பார்க்க முடியாது. மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது” என புகழாரம் சூட்டினார்.
டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் சண்முகம், ஆர்.எம்.வீரப்பனுக்கு ‘அரசியல் சாணக்கியர்’ என்ற பெயர் இருந்தாலும், அதையும் கடந்து ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அவர் திகழ்ந்ததாகக் குறிப்பிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமார் பேசுகையில், தியாகம், அன்பு, தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தவர் ஆர்.எம்.வீரப்பன் என்றும், அவருடன் இருந்தவர்களையும் ஒழுக்கமிக்கவர்களாக உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு என்றும் தெரிவித்தார். மேலும், ஆர்.எம்.வீரப்பன் வாழ்ந்த சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசிடம் முன்வைத்தார்.
மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், “இன்று அரசியலில் என்னென்னவோ நடக்கிறது. ஆனால் அரசியலையும் நாகரிகமாக நடத்தியவர் ஆர்.எம்.வீ. அவரைப் போன்ற அரசியல்வாதியை உருவாக்க வேண்டும் என்பதே இவ்விழாவின் நோக்கம்” எனத் தெரிவித்தார்.
இவ்விழாவில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர் முத்துலிங்கம், எம்.ஜி.ஆர். கழக பொதுச்செயலாளர் ராமலிங்கம், இயக்குநர் பி.வாசு, முன்னாள் நீதிபதி சுரேஷ்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் சண்முகம், சென்னை கம்பன் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அரசியலில் தூய்மை, நாகரிகம், தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றை கடைப்பிடித்த அரசியல்வாதியாகவும், திரைத்துறையில் பல வெற்றிப் படங்களை வழங்கிய தயாரிப்பாளராகவும் திகழ்ந்த ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழா, அவரது நினைவுகளைப் போற்றுவதுடன், அவரது வாழ்வியல் மதிப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்வாகவும் அமைந்தது.