ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நேற்றிரவு மீண்டும் போர் தொடுத்துள்ளது. இதற்கிடையே சல்மான்கான் பதிவு செய்து நீக்கிய தகவல் காண்போம்..
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து சல்மான்கான் டுவிட் செய்து பின்னர் நீக்கியதால் சர்ச்சை எழுந்துள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நேரத்தில் அவர் மௌனம் சாதித்தது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். போர் நிறுத்தம் குறித்த அவரது பதிவு வைரலாகி, பலவிதமான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன், சல்மான்கான் தனது மகிழ்ச்சியை வலைதளத்தில் பதிவிட்டார். ‘போர் நிறுத்தத்திற்கு கடவுளுக்கு நன்றி’ என பதிவிட்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்த பதிவை நீக்கிவிட்டார். ஆனால், நெட்டிசன்கள் அதன் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவரை விமர்சித்து வருகின்றனர்.
சல்மான்கானின் பதிவைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நேரத்தில் மௌனம் காத்த சல்மான்கான், போர் நிறுத்தத்திற்குப் பிறகு டுவிட் செய்து நீக்கியுள்ளார். வெட்கமாக இல்லை?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்
மற்றொரு நெட்டிசன், ‘போர் நிறுத்தம் குறித்து மட்டுமே கவலைப்படும் சல்மான்கான், பதிவை நீக்கியுள்ளார். ஆனால், அவரது படங்களை என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்’ என்று பதிவிட்டுள்ளார். இன்னொருவர், ‘போர் நிறுத்தம் குறித்து டுவிட் செய்து, பின்னர் நீக்குவதற்கு பதிலாக உங்கள் நாட்டை ஆதரிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்
மே 7-ந்தேதி இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் இந்திய நகரங்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. மே 7 முதல் மே 10 வரை இந்த மோதல் நீடித்தது.
பின்னர், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நேற்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை மீறி, நேற்று இரவு பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.