யோகி பாபுவின் 300வது திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம், வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Dhev Cinemas Pvt Ltd நிறுவனத்தின் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி.S மற்றும் தங்கப்பாண்டி.D தயாரித்துள்ள இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கியுள்ளார். யோகி பாபுவின் 300வது திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ள இப்படம், ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்கும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட டீசரும் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

கதையின்படி, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது கனவை நிறைவேற்ற கடுமையாக உழைத்து ஒரு வாகனத்தை வாங்குகிறார். ஆனால் அந்த வாகனம் திருடப்பட்டதும், அதற்கு பலர் உரிமை கோரும் விசித்திரமான சூழ்நிலை உருவாகிறது. வாகனத் திருட்டு மாஃபியாவை மையமாகக் கொண்டு, நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் விறுவிறுப்பான கமர்ஷியல் அம்சங்களுடன் படம் உருவாகியுள்ளது.

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா. ராஜ்மோகன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

யோகி பாபு, இதுவரை நடித்திராத யதார்த்தமும் உணர்வும் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக அனாமிகா மஹி அறிமுகமாகிறார். மேலும் காளி வெங்கட், அருள்தாஸ், மதன் தட்சணாமூர்த்தி, சுப்ரமணியம் சிவா, மைனா நந்தினி, M. சௌந்தர்யா சரவணன், சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, பவா லட்சுமண், ரஞ்சன் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் லெனின் பாரதியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பிரதீப் காளிராஜா, படத்தொகுப்பை மு. காசிவிஸ்வநாதன், கலை இயக்கத்தை பி. சேகர், சண்டைக் காட்சிகளை ஓம் பிரகாஷ் மேற்கொண்டுள்ளனர்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Arjunan Per PaththuRelease Date Announced for Yogi Babu's 300th Film!Yogi Babu