தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றான ‘ஜென்டில்மேன்’, 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மெகா தயாரிப்பாளர் K.T. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான இப்படம், வரும் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய போஸ்டரையும் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
1993-ம் ஆண்டு வெளியான ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். அவரது வித்தியாசமான திரைக்கதை, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் புதுமையான திரைப்பட உருவாக்கம் ஆகியவை இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. அன்றைய காலகட்டத்திலேயே சமூகப் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் மதுபாலா, வினீத், சுபஸ்ரீ, M.N. நம்பியார், சரண் ராஜ், அஜய் ரத்னம், கவுண்டமணி, செந்தில் மற்றும் ராஜன் பி. தேவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
- Advertisement -
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பிரபுதேவா மற்றும் கவுதமி இணைந்து நடித்த ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடல் பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் பிரபலமாக உள்ளது.
பாலகுமரன் வசனங்களை எழுதிய இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் கவிஞர் வாலி பாடல்களை எழுதியுள்ளனர். தோட்டா தரணி கலை இயக்கத்தையும், V.T. விஜயன் மற்றும் B. லெனின் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.
தற்போது நவீன தொழில்நுட்பத்தில் ரசிகர்களுக்கு புதிய திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில், இப்படம் 4K Ultra HD காட்சித் தரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட 7.1 Surround Sound தொழில்நுட்பத்துடன் மீண்டும் திரைக்கு வருகிறது. ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை கிரேஸ் ஃபிலிம் மீடியா நிறுவனத்தின் சார்பில் அனில் குமார் விநியோகம் செய்கிறார்.
1990-களின் தமிழ் சினிமாவின் பிரம்மாண்டத்தையும், ஏ.ஆர். ரஹ்மானின் காலத்தால் அழியாத இசையையும் மீண்டும் பெரிய திரையில் ரசிக்கும் வாய்ப்பாக இந்த ரீ-ரிலீஸ் அமையவுள்ளது. வரும் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘ஜென்டில்மேன்’ படத்தின் மறுவெளியீடு குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.