குடும்பம், நம்பிக்கை, மனமாற்றம்… ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ – படக்குழுவினர் நம்பிக்கை!

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையாக உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

தயாரிப்பாளர் ஒய். ரவி சங்கர், “திரில்லர், குடும்பக் கதை, ஆன்மீகம் என மூன்று அடுக்குகளைக் கொண்ட கதையாக சிவா இப்படத்தை எங்களிடம் கூறினார். இது எப்படி சாத்தியமாகும் என முதலில் ஆச்சரியப்பட்டோம். ஆனால், அதை சிவா மிக நேர்த்தியாக படமாக்கியுள்ளார். ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நடிகர்களும் தொழில்நுட்பக் குழுவினரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை ரசிப்பார்கள். இந்தப் படத்தை ஐயப்பன் தேர்வு செய்திருக்கிறார் என்றே நினைக்கிறோம். படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்” என்றார்.

வசனகர்த்தா விஜய் பாலாஜி, “மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் ஏற்கெனவே இரண்டு படங்களில் பணியாற்றியுள்ளேன். மூன்று தந்தைகளுக்கு இடையே நடைபெறும் கதை இது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் பங்களிப்பு மிகப்பெரிய பலம். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், “ரவி தேஜா சாரின் படத்திற்கு பாடல் எழுதுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. இந்தப் படத்தை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பிரியா பவானி சங்கரின் வெற்றியும் மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் என்னை மிகவும் நெகிழச் செய்தது. நான் எழுதிய மூன்று பாடல்களுமே கதையுடன் ஒன்றிணைந்த முக்கியமான பாடல்கள்” என்று தெரிவித்தார்.

ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஷர்மா, “ரவி தேஜா சாருடன் பணிபுரிந்தது பெருமையாக உள்ளது. சிவா சார் கதையை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். தமிழ் ரசிகர்களுக்கும் இப்படம் புதுவிதமான அனுபவமாக இருக்கும்” என்றார்.

குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா, “இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். என்னைத் தேர்வு செய்த இயக்குநர் சிவா சார், ரவி தேஜா சார், பிரியா பவானி சங்கர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” எனக் கூறினார்.

நடிகை பிரியா பவானி சங்கர், “கதையைக் கேட்டபோதே இப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க வந்தபோது பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ரவி தேஜா போன்ற மிகப்பெரிய கதாநாயகன் நடித்திருந்தாலும், இயக்குநர் சிவா தான் சொன்ன கதையை எந்தவித சமரசமும் இல்லாமல் படமாக்கியுள்ளார். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது பெருமையாக உள்ளது. ரவி தேஜா சாருடன் பணிபுரிந்த அனுபவம் மறக்க முடியாதது.

வேறு மொழியில் இருந்து வந்த படம் என்ற எண்ணமே தமிழ் ரசிகர்களுக்கு வராது. மொழி ஒரு தடையல்ல. அப்பா–மகள் உறவு இருக்கும் அனைத்து இடங்களிலும் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

- Advertisement -

இயக்குநர் சிவா நிர்வாணா, “தமிழ் சினிமாவுடன் எனக்கு எப்போதும் உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது. குறிப்பாக பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற இயக்குநர்களின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு திரையரங்கிலிருந்து வெளியேறும் ரசிகர்கள், அந்தப் படத்திலிருந்து ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்.

அந்த வகையில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படமாக ‘இருமுடி கட்டு’ இருக்கும். படம் முடிந்த பிறகு அதன் தாக்கத்தால் உங்கள் மகள், மனைவி குறித்து நிச்சயம் யோசிப்பீர்கள். தெலுங்கில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வந்து பார்த்து வருகின்றனர். அதேபோல் தமிழிலும் குடும்பத்துடன் வந்து படத்தை ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

படத்திற்கு ஆதரவு அளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரவி தேஜாவை இந்தப் படத்தில் முற்றிலும் வேறொரு கோணத்தில் பார்க்கலாம்” என்று கூறினார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், “ஒரு படத்திற்கு இசையமைக்க அதன் கதை மிகவும் முக்கியம். ‘பொல்லாதவன்’, ‘ராஜா ராணி’ போன்ற படங்களின் கதைகளைக் கேட்டபோது அவை நிச்சயம் வெற்றி பெறும் என்று தோன்றியது. அதே உணர்வு ‘இருமுடி கட்டு’ கதையைக் கேட்டபோதும் ஏற்பட்டது.

ரவி தேஜா சாருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ரஜினியின் ‘பாட்ஷா’ படத்தில் இருந்த தனித்துவம் போல, கமர்சியல் படங்களில் ரவி தேஜாவுக்கும் தனித்துவமான பாணி உள்ளது. இனி சிவா நிர்வாணாவின் படங்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவாகும். குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா இப்படத்திற்காக பல விருதுகளைப் பெறுவார் என எதிர்பார்க்கிறேன். குடும்பத்துடன் திரையரங்குகளில் சென்று இந்தப் படத்தைப் பாருங்கள்” என்றார்.

நடிகர் ரவி தேஜா, “இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசைதான் இப்படத்தின் ஆன்மா. தெலுங்கில் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நட்சத்திராவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பிரியாவும் சிறப்பாக நடித்துள்ளார். தயாரிப்பாளர்களின் ஆதரவுக்கு நன்றி.

இயக்குநர் சிவாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அது ஏன் என்பதை படத்தின் வெற்றி விழாவில் சொல்கிறேன். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்” எனத் தெரிவித்தார்.

குடும்ப உறவுகள், ஆன்மீகம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட ‘இருமுடி கட்டு’, தமிழ் ரசிகர்களுக்கும் புதியதொரு உணர்வுப்பூர்வமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Irumudi KattuRavi TejaRavi Teja’s Irumudi Kattu Promises an Emotional Blend of Family Faith and Transformation