சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வெளியான ‘பராசக்தி’ படம் வரவேற்பு பெற்றுள்ளது தெரிந்ததே. இப்படத்தில் ரவிமோகனின் மாறுபட்ட நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது. அவ்வகையில் அவர் நடித்துள்ள ‘கராத்தே பாபு’ படம் பற்றிப் பார்ப்போம்..
கவின் நடிப்பில் ‘டாடா’ படத்தை இயக்கி வரவேற்பு பெற்ற கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்துள்ள படம் ‘கராத்தே பாபு’. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘வரும் கோடை விடுமுறைக்கு யாரு வந்தாலும் பரவாயில்லை, புலி வருது’ன்னு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான ரவி மோகனின் ‘காதலிக்க நேரமில்லை’ படம் பாராட்டுகளை பெற்றாலும், பாக்ஸ் ஆபீஸில் மந்தநிலை. இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான பராசக்தி படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ரவி மோகன் நடித்திருந்தார். அவரது நடிப்பு படத்தில் சிறப்பாக இருந்தது என பலரும் பாராட்டி வந்த நிலையில், அதைவிட கராத்தே பாபு படத்தின் டீசரிலேயே ரவி மோகன் கம்பேக் கொடுக்கப் போகிறார் என ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
ரவி மோகன், தனியாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். யோகிபாபு நடிப்பில் இயக்குநராகவும் களம் இறங்குகிறார். இச்சூழலில், டாடா படத்திற்கு பிறகு ‘கராத்தே பாபு’ மூலம் மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை இயக்குநர் கணேஷ் கே.பாபு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாசர், கே.எஸ். ரவிக்குமார், தவுதி ஜவால் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
அரசியல் வசனங்கள் தெறிக்கும் டீசரில் ரவி மோகனின் நடிப்பு மிரட்டுகிறது. ஆர்.கே. நகர் தொகுதியில் நடந்த தேர்தலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டீசர் வெளியாகும் முன்னதாக, ‘அனைத்தும் கற்பனையே’ என்ற பாதுகாப்பு வாசகத்துடன் கோடை விடுமுறையில் வெளியாகிறது.