ராஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கும் இப்படத்தை அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ராஷ்மிகா, கோண்ட் பழங்குடியின பெண்ணாக மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதாபாத்திரத்தின் தன்மையை திரையில் இயல்பாக வெளிப்படுத்துவதற்காக ராஷ்மிகா கடுமையாக உழைத்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பார்வை ஏற்கனவே ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது ‘மைசா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

வெளியீட்டு தேதியை அறிவிக்கும் போஸ்டரில், கையில் பிரம்மாண்டமான ஈட்டியுடன் போர்க்காயங்களோடு ஆக்ரோஷமான தோற்றத்தில் ராஷ்மிகா இடம்பெற்றுள்ளார். பின்னணியில் திரண்டிருக்கும் மக்கள் கூட்டம், தீப்பிழம்புகள், பாரம்பரிய உடைகள் மற்றும் ஆயுதங்கள் என போஸ்டர் படத்தின் பிரம்மாண்ட ஆக்‌ஷன் உலகத்தை வெளிப்படுத்துகிறது.

- Advertisement -

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம், பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் திரைப்படங்களுக்கு புதிய பரிமாணத்தை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அதிரடியான ஸ்டண்ட் காட்சிகளுடன், ரசிகர்களுக்கு பரபரப்பான திரையரங்க அனுபவத்தை வழங்கும் நோக்கில் படக்குழு பணியாற்றி வருகிறது.

இதனிடையே, சவாலான ஆக்‌ஷன் காட்சி ஒன்றில் நடித்தபோது ராஷ்மிகாவுக்கு சமீபத்தில் காயம் ஏற்பட்டது. தற்போது அதிலிருந்து குணமடைந்து வரும் அவர், விரைவில் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்ய உள்ளார். படப்பிடிப்பில் இன்னும் 12 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருபுறம் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மறுபுறம் VFX, பின்னணி இசை மற்றும் ஒரிஜினல் ஸ்கோர் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷ்ரேயாஸ் பி. கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். சர்வதேச ஸ்டண்ட் நிபுணர் ஆண்டி லாங் மற்றும் கேச்சா காம்பாக்டீ ஆகியோர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

‘மைசா’ திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

MysaaRashmika MandannaRashmika Mandanna’s Mysaa Release Date Announced