சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்தை தொடர்ந்து ‘ நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முடிவடையவுள்ளது.
படப்பிடிப்பின் இடைவெளியில் ரஜினியிடம் புதிய கதையொன்றை கூறியிருக்கிறார் நெல்சன். அக்கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருப்பதால், அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘ஜெயிலர் 2’ முடித்தவுடன் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் நெல்சன். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர் படத்தினை முடித்துவிட்டு, ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தினை நெல்சன் இயக்குவார் என தெரிகிறது. இனி வரும் நாட்களில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைவது குறித்த அதிகாரபூர்வ செய்தி வெளியாகக் கூடும்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி – நெல்சன் கூட்டணி உருவானது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது.
இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. முதல் பாகத்தில் நடித்த நடிகர்களுடன் வேறு சில புதிய நடிகர்களும் நடித்து வருவதை படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும், அதற்கான கதை விவாதத்தில் லோகேஷ் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இது தொடர்பாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வருமோ? பொறுத்திருந்து பார்ப்போம்.