சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்-2 படத்திற்கு புதிய இசையமைப்பாளர்?: வைரலாகும் கோரிக்கை..

‘ரஜினி படத்தில், புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துங்கள்’ என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:

தமிழ் சினிமாவில், தற்போது நம்பர் ஒன் இசையமைப்பாளராக அனிருத் உள்ளார். அவர் கைவசம் விஜய்யின் தளபதி 69, அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 3, ரஜினிகாந்தின் கூலி, சிவகார்த்திகேயனின் எஸ்.கே.23 போன்ற படங்கள் உள்ளன.

இதுதவிர ஹிந்தியில் ஷாருக்கானுடன் ஒரு படம், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா படம், அட்லீ – சல்மான் கான் கூட்டணியில் உருவாகும் படம் என செம பிஸியில் இருக்கிறார்.

இந்நிலையில், ரஜினியின் ‘கூலி’ பட இசையமைப்பு பணிகளில் உள்ள அனிருத், அடுத்ததாக ஜெயிலர் 2 படத்துக்கும் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

அண்மையில், ஜெயிலர் 2 திரைப்படத்தின் புரோமோ ஷூட் நடைபெற்றது. இந்த புரோமோ ரஜினிகாந்த் பிறந்த நாளன்றே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படக்குழு அதை வெளியிடவில்லை. இந்த புரோமோ ரிலீஸ் தாமதத்திற்கு அனிருத் காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஏனெனில், ஜெயிலர் 2 படத்துக்காக அவர் 17 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் எனவும், ஜெயிலர் படத்துக்கு அவர் வாங்கியதை விட இது அதிகம் என்பதால், படக்குழு இதுகுறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர்.ரகுமானே தற்போது ஒரு படத்துக்கு ரூ.8 கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில், அவரைவிட அனிருத் டபுள் மடங்கு சம்பளம் கேட்டுள்ளது கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக் ஆக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பள விஷயத்தில் உடன்பாடு ஏற்பட்ட பின்னரே ஜெயிலர் 2 புரோமோ வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இணையவாசிகள், ‘தாமதமே வேண்டாம். நெல்சனும், சன் பிக்சர்ஸும் இணைந்து, ரஜினியிடம் மரியாதைக்காக தெரிவித்து விட்டு, திறமையிருந்தும் வாய்ப்புக்காக காத்திருக்கும் புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துங்கள்’ என தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.

rajinikanth in jailor-2 movie music director introduce
Anirudhjailer 2 movierajini kanthஏ ஆர் ரகுமான்சம்பளம்