ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் மீண்டும் சேர்ந்து ஒரே படத்தில் பார்க்க வேண்டும் என சினிமா ரசிகர்கள் பல வருடமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் நானும், ரஜினியும் சேர்ந்து நடிக்கப் போகிறோம் என்று அண்மையில் நடந்த சைமா விருது விழாவில் உறுதி செய்தார் கமல்ஹாசன்.
சேர்ந்து நடிக்கிறோம் என்று சொன்னாரே தவிர, அதை இயக்கப் போவது யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரை சேர்த்து வைத்து படம் எடுக்கும் திட்டத்தில் இருந்தார் லோகேஷ் கனகராஜ். அதனால், அந்த வாய்ப்பு லோகேஷுக்கு தான் என்று பேச்சு கிளம்பியது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்த் தானும், நண்பர் கமலும் சேர்ந்து படம் பண்ணப் போவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ரெட் ஜெயண்ட், ராஜ்கமலுக்கு சேர்ந்து படம் பண்ணப் போகிறேன். ஆனால் இன்னும் இயக்குநரை முடிவு செய்யவில்லை என்றும், நல்ல கதை, கதாபாத்திரம் கிடைத்தால் நடிக்கணும்’ என்றார்.
கமலுடன் நடிக்கும் திட்டம் இருக்கிறது, ஆனால் இயக்குநர் முடிவாகவில்லை என்று ரஜினிகாந்த் சொன்னதை கேட்ட சினிமா ரசிர்களோ, இந்த படம் லோகேஷ் கனகராஜுக்கு இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ படத்தை பார்த்தவர்கள் இயக்குநரை மட்டும் அல்ல ஹீரோவையும் விமர்சித்தார்கள். ரஜினி போய் இப்படி வன்முறையை நம்பி நடித்திருக்கிறாரே எனவும் விமர்சித்தனர்.
ரஜினி மற்றும் கமல்ஹாசனை வயதான கேங்ஸ்டர்களாக வைத்து படம் எடுக்கும் ஐடியாவில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ் எனவும் சொல்லப்படுகிறது.
முன்னதாக, பாலிவுட்டில் அமீர்கானை சூப்பர் ஹீரோவாக வைத்து பெரும் பொருட்செலவில் படம் எடுக்கிறார் லோகேஷ் கனகராஜ் என்று கூறப்பட்டது. ஸ்க்ரிப்ட் இல்லாமல் நான் படம் பண்ண மாட்டேன். அதனால், உங்கள் படத்தில் நடிக்க முடியாது என அமீர்கான் கூறியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.