திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கமாக இருந்தாலும், அவர்களுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிப்பது விருதுகள் தான். அந்த வகையில் திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கௌரவித்து வரும் எடிசன் விருதுகள், தனது 18ஆம் ஆண்டை எட்டியுள்ளது. இதன் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசுகையில், “18 ஆண்டுகளாக எடிசன் விருதுகள் தொடர்ந்து நடைபெறுவது பெருமைக்குரிய விஷயம். செல்வகுமாரை நீண்ட காலமாக அறிவேன். அவர் இன்னும் பல ஆண்டுகள் இந்த விழாவை நடத்த வேண்டும். சினிமாவில் இருப்பதே ஒரு பெருமை. அந்த துறையினருக்கு அங்கீகாரம் அளிக்கும் இந்த விழா மகிழ்ச்சி தருகிறது” என்றார்.
டாக்டர் சி.எம்.கே. ரெட்டி கூறியதாவது, “பல சவால்கள் மற்றும் வேதனைகளை கடந்து ஒரு அமைப்பு 18 ஆண்டுகள் நீடிப்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள். மருத்துவத்துறையும் சினிமாத்துறையும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை நடைமுறை வாழ்க்கை சிக்கல்கள்தான். சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும்” என்றார்.
இயக்குநர் விக்ரமன் பேசுகையில், “இந்த விழாவில் பங்கேற்பது பெருமையான தருணம். என் மகன் சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருது பெற்றுள்ளார். இனி அவர் சிறந்த நடிகருக்கான விருதும் பெற வேண்டும் என்பதே என் ஆசை. ஃபிலிம் ஃபேர், தேசிய விருது, மாநில விருதுகள் போல எடிசன் விருதும் பெருமைக்குரியது. இந்த விழா மேலும் உயர வேண்டும்” என்றார்.
நடிகர் ஜெகன், “மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இந்த விழாவை தொகுத்து வழங்கியுள்ளேன். பலருக்கு இந்த விருது உற்சாகம் அளித்துள்ளது. ராதாரவி அவர்களின் நகைச்சுவை உணர்வு சிறப்பானது. அம்பிகா மேடம் மற்றும் விக்ரமன் சார் படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். 18 ஆண்டுகளை எட்டிய இந்த விழாவிற்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகை அம்பிகா, “18 ஆண்டுகளாக நடைபெறும் இந்த விழாவிற்கு வாழ்த்துக்கள். செல்வாவை பல ஆண்டுகளாக அறிவேன். படப்பிடிப்பு காரணமாக வர முடியுமா என சந்தேகம் இருந்தது. ஆனால் சரியான தருணத்தில் கலந்து கொள்ள முடிந்தது மகிழ்ச்சி. ராதாரவி அண்ணன் எனக்கு குடும்பம் போன்றவர். அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்றார்.
ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, “நாங்கள் இன்று இந்த நிலைக்கு வந்தாலும் ஆரம்ப காலத்தில் எங்கள் பணியை யாராவது பாராட்டுவார்களா என்ற ஏக்கம் இருந்தது. அத்தகைய திறமைகளை கண்டறிந்து விருது வழங்குவது மிக மகிழ்ச்சி தருகிறது. ‘சித்திரை செவ்வானம்’ படத்திற்காக எடிசன் விருது பெற்றது மறக்க முடியாத அனுபவம்” என்றார்.
பாடகர் அந்தோணிதாசன், “இந்த விழாவிற்கு அழைத்ததற்கு நன்றி. ஆரம்பத்தில் ரசிகர்களின் கைத்தட்டலே எனக்கு உற்சாகம். பின்னர் திரைத்துறையில் விருதுகள் அந்த உற்சாகத்தை அதிகரித்தன. என்னைப் போன்றவர்களை கௌரவிக்கும் இந்த விழாவிற்கு என் வணக்கங்கள்” என்றார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், “18 ஆண்டுகளாக இந்த விழாவை உலகம் முழுவதும் உள்ளவர்களை ஒருங்கிணைத்து நடத்துவது சாதாரண விஷயம் அல்ல. ராதாரவி அண்ணனுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர் மிகவும் அன்பானவர். என்னை பல இடங்களில் பாராட்டியவர் அவர்தான். விருது பெற்ற அனைவருக்கும் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்” என்றார்.