நித்யா மேனன் தற்போது தலைவன் தலைவி, இட்லி கடை ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளன.
இந்நிலையில், தனுஷுடன் ‘இட்லி கடை’ படத்தில் நடித்த அனுபவத்தை நித்யா மேனன் பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது. முன்னதாக, அவரது திரைப் பயணத்தில் ஓ காதல் கண்மணி, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் முக்கியமானவையாக அமைந்தன.
குறிப்பாக, திருச்சிற்றம்பலத்தில் ஷோபனா கதாபாத்திரத்தில் பாரதிராஜாவுடன் இணைந்து அவர் செய்யும் சேட்டைகளும், தனுஷ் மீது இருக்கும் காதலை வெளிக்காட்ட முடியாமல் திணறும் இடத்திலும் நித்யா மேனனின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்துக்காக அவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் தலைவன் தலைவி படத்திலும், தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். மீண்டும் தனுஷுடன் நித்யா மேனன் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நித்யாமேனன் தெரிவிக்கையில், ‘இட்லி கடை படத்தில் சாணத்தை என் கைகளால் சுத்தம் செய்தேன். முதன்முறையாக அதை செய்தேன். தேசிய விருது வாங்க செல்வதற்கு ஒருநாள் முன்பு அந்தக் காட்சியில் நடித்தேன். விருதை பெறும்போது எனது விரல் நகங்களில் மாட்டுச் சாணம் இருந்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது’ என்றார். அவரது இந்தப் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.