கார்த்தி – மீனாட்சி சவுத்ரி இணையும் புதிய படம்: பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!

நடிகர் கார்த்தி மற்றும் நடிகை மீனாட்சி சவுத்ரி முதன்முறையாக ஜோடி சேரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் எளிய பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது.

தெலுங்கில் ‘மேட்’ (MAD) மற்றும் ‘மேட் ஸ்கொயர்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கல்யாண் சங்கர், இந்தப் படத்தின் மூலம் கார்த்தியுடன் இணைகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக (Comedy Entertainer) இது உருவாகவுள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மீனாட்சி சவுத்ரி பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களிடையே பிரபலமான இவர், தற்போது கார்த்தியுடன் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நகைச்சுவையில் அதிரடிக்க நடிகர் யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளார்.

கார்த்தி தற்போது இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ‘மார்சல்’ (Marshal) என்ற பீரியட் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தாமதமாவதால், அந்த இடைவெளியைப் பயன்படுத்தி கல்யாண் சங்கர் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை முடிக்க கார்த்தி திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தேர்தல் மற்றும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தப் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளது. எனினும், படப்பூஜை தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. கார்த்தியின் ‘சர்தார் 2’ மற்றும் ‘மார்சல்’ படங்களைத் தொடர்ந்து இந்தப் புதிய படமும் அவரது வரிசையில் இணைந்துள்ளது.

Kalyan ShankarkarthiMeenakshi ChaudharyYogi Babuகார்த்திமீனாட்சி சவுத்ரி