ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டோரதி’. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படக்குழுவின் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய திருநர் சமூக ஆர்வலர் ஷபிதா, கடந்த 16 ஆண்டுகளாக திருநர் சமூகத்திற்காக பணியாற்றி வருவதாகக் கூறியதுடன், ‘டோரதி’ தங்கள் சமூகத்தின் குரலாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். படம் தன்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்ததாகக் குறிப்பிட்ட அவர், திருநர் சமூகத்தினர் இன்னும் பல உயரங்களை அடைவார்கள் என்பதற்கு இப்படமே சாட்சி என்றும் கூறினார்.
நடிகை மாளவிகா பேசுகையில், ‘டோரதி’ படத்தின் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக அமைந்துள்ளதாக பாராட்டினார். ரிஷிகாந்த், சனந்த் என இரண்டு திறமையான நடிகர்களை கார்த்திக் சுப்புராஜ் அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறிய அவர், இந்த ஆண்டில் கிடைத்த மிகச் சிறந்த பரிசு ‘டோரதி’ என்றும், இப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
இயக்குநர் வசந்தபாலன், “ஆணாதிக்கம் மற்றும் மாஸ் என்ற பெயரில் சினிமாவில் திணிக்கப்படும் பல தவறான விஷயங்களுக்கு ‘டோரதி’ பதிலடி கொடுத்துள்ளது. ‘ரோமியோ-ஜூலியட்’ போல இது ஓர் அற்புதமான காதல் படம். இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். மேலும், இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாகவும் பாராட்டினார்.
இயக்குநர் சசி, “நான் தமிழ் சினிமா இயக்குநர் என்பதில் பெருமை கொள்கிறேன். அதற்கு காரணம் ‘டோரதி’. திருநர் சமூகத்திற்காக ஒரு படத்தை உருவாக்க கார்த்திக் சுப்புராஜ் முன்வந்திருப்பது மிகப்பெரிய விஷயம்” என்றார்.
- Advertisement -
இயக்குநர் லிங்குசாமி, பேரன்பும் தைரியமும் கொண்ட ஒருவரால் மட்டுமே ‘டோரதி’ போன்ற படத்தை உருவாக்க முடியும் என கார்த்திக் சுப்புராஜை பாராட்டினார். படத்தை இரண்டு முறை பார்த்ததாகக் கூறிய அவர், இளையராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம் என்றும், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் இருவரையும் ரஜினி-கமல் போன்ற கூட்டணியுடன் ஒப்பிட்டும் வாழ்த்தினார்.
இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “திருநர் சமூகத்தை ‘டோரதி’ மூலம் கார்த்திக் சுப்புராஜ் மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். வசூலைத் தாண்டி காலத்திற்கும் நிற்கக்கூடிய சிறந்த படமாக இது இருக்கும். மாஸ் ஹீரோ டெம்ப்ளேட்டை உடைத்து ரிஷிகாந்த், சனந்த் பெரிய ஹீரோக்களாகியுள்ளனர். கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தின் உயிர்” எனப் பாராட்டினார்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசுகையில், படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவற்றைக் கடந்து ‘டோரதி’ வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் முதலிடம் பிடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இறுதியாக பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “சினிமா ஒரு வலுவான ஆயுதம். மக்கள் மனதை மாற்றும் சக்தி அதற்கு உள்ளது. திருநர் சமூகத்தை இதுநாள் வரை பார்த்த பார்வையை இந்தப் படம் நிச்சயம் மாற்றும் என பலர் என்னிடம் கூறினர். அதுதான் இந்தப் படத்தின் வெற்றி என கருதுகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட வெற்றியாகவும் பார்க்கிறேன். இளையராஜாவின் இசை எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம்” என்றார்.
‘டோரதி’ படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.