சிலம்பத்தில் கலக்கிய குட்டீஸ்களை கௌரவித்த எம்.எல்.ஏ ஶ்ரீநாத்

தமிழர் பாரம்பரிய கலைக்கு தவெக ஊக்கம்.. தேசிய அளவில் சாதித்த சிலம்பாட்ட மாணவர்களுக்கு பாராட்டு!

தமிழர் பாரம்பரிய கலைகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வரும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி சென்னை குரோம்பேட்டை பச்சைமலை விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.

தமிழ்க்குடிமகன் தலைமையில் செயல்படும் “புதிய விதைகள் இயக்கம்” மூலம் குழந்தைகளுக்கு இலவச சிலம்பாட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சியின் மூலம் உருவான மாணவர்கள், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மொத்தம் 32 மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், 20 பேர் தங்கப் பதக்கம், 10 பேர் வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒருவர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த வெற்றி பெற்ற மாணவர்களை தூத்துக்குடி MLA ஶ்ரீநாத் நேரில் சந்தித்து பாராட்டினார். முதலமைச்சர் விஜயின் நண்பரான மனோஜ், திரைப்பட தயாரிப்பாளர் புவனேஷ், A.R. பிரபு உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நிகழ்வில் மாணவர்களுக்கு காசோலைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் இந்த நிகழ்ச்சி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதுகுறித்து பேசிய MLA ஶ்ரீநாத், “குழந்தைகளின் வளர்ச்சிக்கும் திறமைகளுக்கும் தவெக எப்போதும் முக்கியத்துவம் அளிக்கும். தமிழர் பாரம்பரியமான சிலம்பாட்டத்தை தேசிய அளவில் கொண்டு சென்ற தமிழ்க்குடிமகன் மற்றும் மாணவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். தவெக மற்றும் தமிழக அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

தமிழர் கலாச்சாரம், பாரம்பரிய கலை மற்றும் இளம் தலைமுறையின் திறமைகளை முன்னிறுத்தும் நிகழ்வாக இது அமைந்தது.

MLA Sreenath Honours Young Silambam Champions!Srinathஸ்ரீநாத்