ராபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் இனிகோ பிரபாகர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மின்னும் ஓர் இரவு’. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தில் இனிகோ பிரபாகருடன் அஞ்சு கிருஷ்ணா அசோக், பிக் பாஸ் சத்யா, சுப்பிரமணிய சிவா, சரவண சக்தி, ராஜன், உதயராஜ், ‘அருவி’ பாலா, யாசர், பிரதிக்ஷா, பசுபதி ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுரேஷ் குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரணவ் சூரஜ் இசையமைத்துள்ளார். எஸ்.என். ஃபாசில் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தை எவ்ரிடே சினிமா நெட்வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் குகன் வெளியிடுகிறார். வரும் நவம்பர் 27-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
சென்னையில் நடைபெற்ற இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், மணிகண்டன், ‘எகெய்ன் ஃபிலிம் மேக்கர்ஸ்’ அரவிந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இயக்குநர்கள் மணிகண்டன் மற்றும் எஸ்.ஆர். பிரபாகரன் இணைந்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் டாக்டர் பி. ராபர்ட் ராஜ், ஒரு கிராமத்தில் ஒரே இரவில் ஒருவருக்குப் புதையல் கிடைப்பதையும், அதனால் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்களையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். முழுக்க இரவு நேரத்திலேயே படப்பிடிப்பு நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், படக்குழுவினரின் கடின உழைப்பைப் பாராட்டினார்.
நடிகர் உதயராஜ் பேசுகையில், படம் தொடங்கிய முதல் 15 நிமிடங்களிலிருந்தே பார்வையாளர்களைப் பரபரப்பாக வைத்திருக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இனிகோ பிரபாகருக்கு இப்படம் ஒரு சிறந்த கம்பேக் படமாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
விநியோகஸ்தர் குகன் பேசும்போது, சிறிய பட்ஜெட் திரைப்படங்களின் வணிகத்தைப் பாதிக்கும் வகையில் டிக்கெட் முன்பதிவுத் தளங்களில் வழங்கப்படும் ரேட்டிங் முறைகள் இருப்பதாகக் கருத்துத் தெரிவித்தார். எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் ரேட்டிங் மூலம் ஒரு திரைப்படத்தின் வசூலைப் பாதிக்க முடியும் என்றும், இதனால் சிறிய தயாரிப்பாளர்கள் பெரும் சவால்களைச் சந்திப்பதாகவும் கூறினார்.
மேலும், திரைப்படங்களின் வெளியீட்டுத் திட்டமிடலில் தெளிவு தேவை என்றும், திரையரங்குகள் ஒரு வாரத்திற்கு முன்பே படங்களுக்கான காட்சிகள் மற்றும் வெளியீட்டு அட்டவணையை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். புதிய இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களுக்கு தமிழ் சினிமா தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
- Advertisement -
இசையமைப்பாளர் பிரணவ் சூரஜ் பேசுகையில், சுயாதீன இசைக்கலைஞராகப் பல பாடல்களை உருவாக்கியிருந்தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்ததாகவும், இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் தனது திறமையை அடையாளம் கண்டு இப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை வழங்கியதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பிக் பாஸ் சத்யா பேசும்போது, இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், படப்பிடிப்பில் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறினார். மேலும், இப்படம் ஒரு ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இயக்குநரும் நடிகருமான சுப்பிரமணிய சிவா, இயக்குநர் சிவபிரபு செல்வராஜின் தெளிவான அணுகுமுறையையும் ஒளிப்பதிவாளர் சுரேஷ் குமார் சுந்தரத்தின் உழைப்பையும் பாராட்டினார். ஆசை மற்றும் அதனால் ஏற்படும் துன்பங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இயக்குநர் மணிகண்டன் பேசுகையில், சிவபிரபு செல்வராஜ் இந்தக் கதையை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தன்னிடம் கூறியதாகவும், முதலில் குறும்படமாக உருவாக்குமாறு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார். பின்னர் அவர் தனது முயற்சியால் கதையைச் சிறப்பாக உருவாக்கிக் காட்டியதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்களை அணுகுமாறு ஊக்கப்படுத்தியதாகக் கூறினார்.
நடிகர் இனிகோ பிரபாகர் பேசும்போது, படத்தின் கதைச் சுருக்கத்தைக் கேட்டதுமே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இயக்குநர் சிவபிரபு செல்வராஜின் அர்ப்பணிப்பையும், தயாரிப்பாளர் ராபர்ட் ராஜின் ஆதரவையும் பாராட்டினார். படக்குழுவினர் அனைவரும் நேர்மறையான எண்ணத்துடன் பணியாற்றியதாகவும் கூறினார்.
இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் பேசுகையில், தனது தந்தை தன்னை இயக்குநராக இந்த மேடையில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், தற்போது அவர் இல்லாதது வருத்தமளிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், கதை முழுவதும் இரவில் நடைபெறுவதால் படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேர்வு செய்வதில் பல சவால்களை எதிர்கொண்டதாகவும், கிராம மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் பேசும்போது, தனது முதல் படமான ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தில் இனிகோ பிரபாகருடன் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். திறமையான நடிகராக இருந்தும் அவருக்கான பெரிய அங்கீகாரம் கிடைக்காதது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார். சரியான கதைக்காகப் பொறுமையுடன் காத்திருந்த இனிகோவிற்கு ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கிரைம் திரில்லர் கதைக்களம், ஒரே இரவில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்கள் என வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படம் வரும் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.