ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘கோவிந்தம்மா’, வெளியான குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற ‘ஆரா 10/10’ மற்றும் ‘பப்பாளி பழமே’ பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து வந்துள்ள இந்த புதிய பாடல், கிராமிய இசை நயத்தையும் சமகால இசை அம்சங்களையும் இணைத்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் ரம்யா ரங்கநாதன் இணைந்து தோன்றும் இந்த பாடலில், ஆதியின் வித்தியாசமான பழங்கால தோற்றமும் கவனம் ஈர்த்துள்ளது.
ஹிப்ஹாப் தமிழா எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள இந்த திரைப்படம், முதல் பாகத்தின் இசை மரபை தொடர்வதோடு, புதிய தலைமுறை ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் உருவாகி வருகிறது. ‘கோவிந்தம்மா’ பாடலை ஹிப்ஹாப் தமிழா, கௌஷிக் கிரிஷ், கானா வினோத், கானா உலகம் தரணி மற்றும் கானா சுதாகர் இணைந்து பாடியுள்ளனர்.
இதற்கு முன் வெளியான ‘ஆரா 10/10’ பாடல் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. அதனைத் தொடர்ந்து வெளியான ‘பப்பாளி பழமே’ பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘கோவிந்தம்மா’ பாடலின் வெற்றியால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை குஷ்பூ சுந்தர் மற்றும் ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்துள்ளனர். காதல், நகைச்சுவை, இசை, உணர்வுகள் மற்றும் மாஸ் அம்சங்கள் நிறைந்த முழுமையான பொழுதுபோக்கு படமாக ‘மீசைய முறுக்கு 2’ உருவாகி வருகிறது.
ஹிப்ஹாப் தமிழா ஆதி, கேதிகா சர்மா, சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.