மணிகண்டனின் மக்கள் காவலன் முதல் பாடல் வெளியீடு!

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘மக்கள் காவலன்’. நடிகர் கே. மணிகண்டன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை சந்தோஷ்குமார் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் (IGNORE)’ தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் ஹிப்-ஹாப் இசையின் முன்னணி கலைஞரான யோகி பி, நடிகையும் பாடகியுமான அதிதி ஷங்கர் மற்றும் நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்பாடலுக்கு எம்.கே. பாலாஜி வரிகள் எழுதியுள்ளார். பாடலின் இசை ஒருங்கிணைப்பு மற்றும் புரோகிராமிங் பணிகளையும் நிவாஸ் கே. பிரசன்னா மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஒவ்வொரு கட்டத்திலும் புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் எதிர்கொள்ளும் காவல்துறை அதிகாரியின் மன உறுதியையும், அதிலிருந்து அவர் மீண்டெழும் பயணத்தையும் மையமாகக் கொண்டு ‘IGNORE’ பாடல் உருவாகியுள்ளது. வலியை வலிமையாக மாற்றிக்கொண்டு எதிர்ப்பையும் துணிச்சலையும் வெளிப்படுத்தும் அதிரடியான ராப் பாடலாக இது அமைந்துள்ளது.

- Advertisement -

பாடலின் இடையே இடம்பெறும் நாட்டுப்புற இசை மரபுகளும், தொடர்ந்து ஒலிக்கும் பறை இசையும் பாடலுக்கு மண்ணின் மணத்தையும் கூடுதல் வீரியத்தையும் அளிக்கின்றன. அவமானங்களால் முடங்கிவிடாமல், அவற்றையே தனது வெற்றிக்கான உந்துசக்தியாக மாற்றிக்கொள்ளும் ஒருவரின் போராட்டத்தை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.

கண்ணியத்துடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதன், ஊழல் நிறைந்த அமைப்பின் அழுத்தத்தால் எதிர்த்து நிற்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறான். தனது வாழ்வுக்காகத் தொடங்கும் அவனது போராட்டம், நாளடைவில் மக்கள் நலனுக்கான பெரும் போராட்டமாக மாறுகிறது. தான் விரும்பாத சூழலிலேயே தலைவனாக உருவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஒரு சாதாரண மனிதன் எப்படி மக்களின் காவலனாக மாறுகிறான் என்பதையே இப்படம் பேசுகிறது.

‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் அறிமுகமாக வெளியாகியுள்ள ‘IGNORE’ பாடல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

A VenkateshDivya SripadaMakkal KaavalanmanikandanManikandan's Makkal Kaavalan First Single ReleasedR.K. VijaymuruganVaagai Chandrasekar