சூர்யாவுக்கு கஜினி படமும், விஜய்க்கு துப்பாக்கி படமும் கொடுத்த முருகதாஸின் இயக்கத்தில் மிரட்டலாய் களமிறங்கி இருக்கிறது ‘மதராஸி’. இப்படம் குறித்த விமர்சனம் பார்ப்போம்..
தனது குடும்பத்தை இழந்த சிவகார்த்திகேயன் மனநோயால் பாதிக்கப்படுகிறார். யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என காப்பாற்றுகிறார். இவரது மனதை அறிந்த ருக்மணி உளமார காதலிக்கிறார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு மனநிலை சரியாகிறது. மற்றவர்களை காப்பாற்றும் எண்ணத்தை விட்டு விடுகிறார். இதனால், ருக்மணி பிரிந்து விட, சிவகார்த்திகேயன் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்.
இச்சூழலில், சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை புகுத்த முயற்சி செய்கின்றனர் வித்யுத் ஜம்வாலும், ஷமீரும். அவ்வகையில், ஒரு தொழிற்சாலையில் துப்பாக்கிகளை வைக்கிறார்கள். இதனைத் தெரிந்த காவல் அதிகாரிகள் அந்த தொழிற்சாலை மற்றும் துப்பாக்கியை அழிக்க சிவகார்த்திகேயனை பணயமாய் வைக்கிறார்கள். இதில், சிவகார்த்திகேயன் துப்பாக்கி கலாச்சாரத்தை அளித்தாரா? மீண்டும் காதலியுடன் இணைந்தாரா? என்பதை மீதிக் கதை.
படத்தில் எஸ்.கே.வின் ஆக்சன் போர்ஷன் ஈர்க்கிறது. டைமிங் காமெடி ஆக்டிங்கில் வசீகரிக்கிறார். குறிப்பாக, மருத்துவமனையில் நோயாளிகளை காப்பாற்றும் நிகழ்வில் நெகிழ வைக்கிறார். மாலதி கேரக்டரில் வரும் ருக்மணி மகாநதியாக அழகு பாய்ச்சலில் வருகிறார். கொஞ்சல், கெஞ்சல், சீற்றம் என நவரச உணர்ச்சிகளை நடிப்பில் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார். பிஜுமேனனும், விக்ராந்தும் கேரக்டராவகவே வாழ்ந்திருக்கின்றனர்.
சில காட்சிகள் யூகிக்க முடிந்தாலும் பரபரப்பான ஸ்கிரீன்ப்ளே மறக்கடித்து விடுகிறது. சமூகப் பேரழிவுகளை சுட்டிக்காட்டி முத்திரை பதிக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்திலும் வென்றிருக்கிறார்.
துள்ளலான ஒளிப்பதிவில் சுதீப் இளமோன் நெஞ்சை அள்ளியிருக்கிறார். அதற்கேற்ப அனிருத்தின் பிஜிஎம் எகிறி அடித்திருக்கிறது.
முன்னதாக முருகதாஸ் குறிப்பிடுகையில், ‘ஆக்சன் படத்துல வில்லன் கேரக்டர் வலுவானதாக இருக்கணும். வில்லன்னா, அது நபராக இருக்கணும்னு அவசியமில்ல. ஒரு பிரச்சினையாக கூட இருக்கலாம். மதராஸி ஹீரோவுக்கும் வில்லனுக்குமான மோதல். நமக்கு கனெக்ட் ஆகும். இப்படம் மக்களிடம் சேரும்’ என்றார்.
அவரது கூற்றுப்படி இப்படம் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது. ஆக்சனை அள்ளி வார்த்திருக்கிறது. ரசிக்கலாம்..!
மதராஸி திரை விமர்சனம்
- Rating