விஜய் மீது, திண்டுக்கல் லியோனி கேலியாய் பேசிய விமர்சனம் இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:
நடிகர் விஜய் அரசியலில் இறங்கி தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நிலையில், விக்கிரவாண்டியில் அவர் நடத்திய முதல் மாநாட்டிற்கு பல லட்சம் மக்கள் திரண்டனர்.
இதனையடுத்து, விஜய் பிற கட்சி பிரமுகர்களின் விமர்சனங்களுக்கும் தொடர்ந்து உள்ளாகி வருகிறார்.
இந்நிலையில், துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பட்டிமன்றப் பேச்சாளரும் திமுக கொள்கை பரப்பு செயலாளருமான திண்டுக்கல் லியோனி, தொடர்ந்து விஜய்யை விமர்சித்து வருகிறார்.
அவ்வகையில் பேசிய திண்டுக்கல் லியோனி, ‘விக்கிரவாண்டியில ரெண்டு கிழவிகள் டீக்கடையில பேசிக்கிட்டாங்க. ஒரு கிழவி கேக்குது, 65 வயசு ஆவுது எனக்கு, இதுவரைக்கும் விழுப்புரத்துல இப்படி ஒரு வெள்ளம் வந்து கேள்விப்பட்டிருக்கோமா? வெள்ளம் வந்து ஆடு, மாடெல்லாம் அடிச்சிட்டு போனத என் கண்ணால பாத்ததே இல்ல. ஏன் ஆத்தா இப்படி நடக்குதுன்னு கேக்குது.
அதுக்கு இன்னொரு கிழவி சொல்லுது, என்னைக்கு இந்த பாழா போன பயலுங்க விக்கிரவாண்டில வந்து மாநாடு போட்டாங்களோ.. அன்னைக்கு விளங்காம போனதுதான் விழுப்புரம்னு சொல்றாங்க’ என சொல்லிவிட்டு, ‘இத நான் சொல்லலப்பா, ரெண்டு கிழவிகள் பேசிட்டு இருந்ததை ஒட்டுக்கேட்டேன் நான்’ என பேசியுள்ளார்.
தொடர்ந்து விஜய்யை விமர்சித்து லியோனி பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் திமுக& தவெக மோதலை உருவாக்கும் போக்கிற்கு வழி வகுப்பதாக இணைய வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, லியோனி பேச்சுக்கு விஜய் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது.