யுத்தம் என்பதற்கும் முத்தம் என்பதற்கும் ஒரு எழுத்துதான்ங்க வித்தியாசம். இப்ப, விஷயத்திற்கு வருவோம்..
மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படம் ஜுன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி, அதில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சியில் கமல்ஹாசன் தன்னைவிட 30 வயது இளைய நடிகை அபிராமி உடன் நெருக்கமான காட்சியில் நடித்திருப்பது சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது.
டிரெய்லரில் இடம்பெற்றுள்ள அதிரடிக் காட்சிகள், கமல்ஹாசனின் வித்தியாசமான தோற்றங்கள் மற்றும் பிற காட்சிகள் கவனத்தை ஈர்த்தாலும், கமல்ஹாசன்-அபிராமி இடையேயான முத்தக்காட்சி வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காட்சி குறித்து இணையவாசிகள் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு தரப்பினர், கலைஞர்களுக்கு வயது ஒரு தடையில்லை, கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதைச் செய்வது அவர்களின் கடமை. கமல்ஹாசன் தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க எப்போதும் தயங்கியதில்லை, இதுவும் அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் என்று கூறுகின்றனர்.
கதையின் ஒரு பகுதியாக அத்தகைய காட்சிகள் தேவைப்பட்டால், நடிகர்களின் வயது வித்தியாசத்தைப் பெரிதுபடுத்துவது சரியல்ல என்பது அவர்களின் வாதம். ஆனால், மற்றொரு தரப்பினர் இந்தக் காட்சி குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
நடிகர்கள் தங்களைவிட மிகவும் இளைய நடிகைகளுடன் காதல் காட்சிகளில் நடிப்பது இந்திய சினிமாவில் வழக்கமாக இருந்தாலும், இவ்வளவு பெரிய வயது வித்தியாசம் இருக்கும்போது, அது அசௌகரியமாகவும் சில சமயங்களில் அநாகரிகமாகவும் தோன்றுகிறது என்று விமர்சித்துள்ளனர்.
‘இது வெறும் கவர்ச்சிக்காக அல்லது பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக மட்டுமே செய்யப்பட்டதாகத் தெரிகிறது, கதைக்கு இதன் அவசியம் என்ன? என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னதாக ‘சத்யா’ படத்தில் ‘வளையொசை கலகலவென’ பாடலில் அமலாவுக்கு கமல் எங்கெங்கே எத்தனை முத்தம் கொடுத்தார் என சொல்ல முடியுமா? இதெல்லாம் ஒரு முக்கியமான பிரச்சினையா.! கமல் படத்தில், முத்தம் இல்லன்னாதான் பிரச்சினை.. போங்கய்யா நீங்களும் உங்க கருத்துகளும்.! எனவும் தெறிக்க விடுகின்றனர்.