ஜனநாயகன் திரை விமர்சனம்

சிறையில் கைதியாக இருந்தாலும், அந்தச் சிறையின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்று அனைவரின் நம்பிக்கையையும் பெற்றவராக இருக்கிறார் விஜய். அவருக்கு துணையாக செயல்படும் போலீஸ் அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனன், உயர் அதிகாரிகளின் எதிர்ப்பை சந்தித்து, பின்னர் ஒரு விபத்தில் உயிரிழக்கிறார். தனது மகள் மமிதா பைஜூவை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற கௌதம் மேனனின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பை விஜய் ஏற்றுக்கொள்கிறார்.

மமிதாவுக்கு கடுமையான பயிற்சிகளை அளித்து ராணுவத்தில் சேர்க்க முயற்சிக்கும் நிலையில், மறுபுறம் ஆப்பிரிக்காவில் கொடூரச் செயல்களை அரங்கேற்றி வந்த பாபி தியோல், இந்தியாவை குறிவைத்து மிகப்பெரிய சதித் திட்டத்தை செயல்படுத்த வருகிறார். இந்திய கடற்படையை தாக்கி நாட்டுக்குள் நுழையும் அவர், எதிர்பாராத விதமாக மமிதா பைஜூவுடன் மோதலில் சிக்குகிறார். இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்கிறார்.

மமிதாவை காப்பாற்ற மீண்டும் ஆயுதம் ஏந்தும் விஜய், பாபி தியோலுக்கு எதிராக களமிறங்குகிறார். விஜய்யின் உண்மையான அடையாளத்தை அறிந்த பாபி தியோல், பழிவாங்கத் துடிக்கிறார். இவர்களுக்கிடையேயான பழைய பகை என்ன? பாபி தியோலின் சதித் திட்டம் என்ன? அதை விஜய் முறியடிக்கிறாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகராக விஜய் முழுப் படத்தையும் தனது தோள்களில் சுமந்து செல்கிறார். ஆக்ரோஷமான ஆக்ஷன் காட்சிகளிலும், மகளிடம் பாசம் காட்டும் உணர்வுப்பூர்வமான தருணங்களிலும் இரு வேறு பரிமாணங்களில் சிறப்பாக நடித்துள்ளார். நடனக் காட்சிகளிலும் வழக்கம்போல் தனது மாஸை நிரூபித்துள்ளார். ரசிகர்களுக்கு முழுமையான கொண்டாட்டமாக இந்த படம் அமைகிறது.

- Advertisement -

பூஜா ஹெக்டே அழகான கதாநாயகியாக வந்து காதல் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். மமிதா பைஜூ தனது துறுதுறுப்பான நடிப்பால் மனதில் பதிகிறார். வில்லனாக பாபி தியோல் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பிரியாமணி, சுனில், பிரகாஷ் ராஜ், கஜராஜ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர்.

அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக ‘தளபதி கச்சேரி’ மற்றும் ‘ராவண மவண்டா’ பாடல்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன. பின்னணி இசையும் ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் விறுவிறுப்பை அளிக்கிறது.

இயக்குநர் எச். வினோத், விஜய் என்ற சக்திவாய்ந்த நட்சத்திரத்தை முழுமையாக பயன்படுத்தி ஆக்ஷன், உணர்வு, மாஸ் என அனைத்தும் கலந்த விருந்தை படைத்துள்ளார். குறிப்பாக இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் அமைந்துள்ளன.

மொத்தத்தில், ‘ஜனநாயகன்’ விஜய் ரசிகர்களுக்கான முழுமையான மாஸ் ஆக்ஷன் விருந்தாக அமைகிறது.

60%

ஜனநாயகன் திரை விமர்சனம்

  • Rating
Bobby DeolGautham Vasudev MenonJana Nayaganjana nayagan movie reviewMamitha BaijuNarainPooja HegdePrakash RajPriyamaniThalapathy Vijayஜனநாயகன்