தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘உன்னைச் சரணடைந்தேன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மீரா வாசுதேவன். ஜெர்ரி, ஆட்டநாயகன், அடங்க மறு உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், ஏராளமான மலையாளம், இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துத் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர்.
சமீபகாலமாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்துகள் குறித்துப் பேசப்பட்டு வந்த நிலையில், தனது மூன்று திருமண முறிவுகள் குறித்தும், அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் மீரா வாசுதேவன் மிகவும் ஓப்பனாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகை மீரா வாசுதேவன் கடந்த 2005-ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் விஷால் அகர்வாலைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் பந்தம் 2010-ல் விவாகரத்தில் முடிந்தது.
அதன் பின்னர், 2012-ஆம் ஆண்டு நடிகர் ஜான் கொக்கெனைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ‘அரிஹா ஜான்’ என்ற ஒரு மகன் உள்ளார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக 2016-ல் இவர்களும் பிரிந்தனர். தொடர்ந்து 2024-ஆம் ஆண்டு விபின் என்ற ஒளிப்பதிவாளரைத் திருமணம் செய்த மீரா, குறுகிய காலத்திலேயே அவரையும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
தற்போது தனது வாழ்க்கைச் சவால்கள் குறித்துப் பேசியுள்ள மீரா வாசுதேவன், சமூகத்தின் பார்வையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்று கூறியுள்ளார்:
“மூன்று திருமணங்கள் தோல்வியடைந்த ஒரு பெண் என்று இந்தச் சமூகம் என்னை முத்திரை குத்தும்போது, அதை என்னால் கடந்து வர முடிந்ததற்குக் காரணம், மற்றவர்களைப் பற்றி நான் கவலைப்படாததுதான். இந்தத் தெளிவுதான் எனக்குள் ஏற்பட்ட பெரிய மாற்றம்.
ஒரு துணை, நம்மை எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறியக்கூடிய ஒரு பொருளாகப் பார்க்கும்போதோ, அல்லது குடும்பத்துக்கும் மகனுக்கும் அச்சுறுத்தலாக மாறும்போதோ, அந்தப் பந்தத்தில் தொடர்ந்து நீடிப்பது தற்கொலைக்குச் சமமானது.”
“மகனிடம் அடிக்கடி கூறுவேன்…”
தனது கடந்த காலத் தவறுகள் குறித்துத் தனது மகனிடம் வெளிப்படையாகப் பேசி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “நான் எனது மகனிடம் அடிக்கடி சொல்வதுண்டு, ‘என் வாழ்க்கையின் 17 ஆண்டுகளை 3 முட்டாள்தனமான திருமணங்களுக்காக வீணடித்துவிட்டேன்’ என்று.
அந்த நேரத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியிருந்தால், எனக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தி இன்னும் எவ்வளவோ சாதித்திருக்க முடியும். என் அப்பா, அம்மா, சகோதரியுடன் அதிக நேரத்தைச் செலவிட்டிருக்கலாம். அதற்குப் பதிலாக, என்னை மதிக்காத, என்னை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத நபர்களுக்காக அந்தப் பொன்னான நேரத்தை வீணடித்துவிட்டேன்” என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
துணிச்சலாகவும் அதே சமயம் சுயபரிசோதனையுடனும் மீரா வாசுதேவன் பகிர்ந்துள்ள இந்தத் தகவல்கள், தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தையும், அவரது தைரியத்திற்கான பாராட்டுகளையும் பெற்று வருகிறது.