‘மேயாத மான்’, ‘ஆடை’ படங்களின் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’29’. விது மற்றும் ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ள இப்படத்தை, கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ மற்றும் லோகேஷ் கனகராஜின் ‘ஜீஸ்குவாட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் மே 8-ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஏப்ரல் 29) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ் தனது திரைப்பயணத்தின் தொடக்ககால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
கார்த்திக் சுப்புராஜ் செய்த உதவி
“நானும் ரத்னகுமாரும் முதல் பட வாய்ப்புக்காகத் தெரு தெருவாக அலைந்திருக்கிறோம். அப்போது வெளியான ‘பீட்சா’ திரைப்படம் தான் எங்களைப் போன்ற பல இயக்குநர்களுக்கு சினிமா கதவைத் திறந்து வைத்தது. கார்த்திக் சுப்புராஜ் தனது ‘ஸ்டோன் பெஞ்ச்’ மூலம் ரத்னாவின் ‘மது’ மற்றும் என்னுடைய ‘அவியல்’ குறும்படங்களை வெளியிட்டார். அந்த வகையில் ரத்னாவை மட்டுமின்றி, என்னையும் அறிமுகப்படுத்தியது கார்த்திக் சுப்புராஜ் சார் தான்,” என்று லோகேஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கமல் சார் தான் இன்ஸ்பிரேஷன்!
தற்போது அதே ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கும் நிலைக்கு உயர்ந்திருப்பது குறித்துப் பேசிய அவர், “சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிற்கே கொடுக்க வேண்டும் என்பதை கமல் சாரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். நாம் வளரும்போது நம்முடன் இருப்பவர்களையும் வளர்த்துவிட வேண்டும். அதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது அதைச் செய்துவிட வேண்டும் என்பதற்கு அவரே எனக்கு இன்ஸ்பிரேஷன்,” என்றார்.
தனது படங்களுக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவை, தனது தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ’29’ திரைப்படத்திற்கும் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.