மலையாளத் திரைப்படங்களை கேரள எல்லைகளைத் தாண்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்பட்டு வரும் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ், தொடர் வெற்றிகளின் மூலம் விநியோகத் துறையில் தனது இடத்தை வலுப்படுத்தி வருகிறது. ‘லோகா’, ‘களம்காவல்’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களின் மூலம் நிறுவனம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
தயாரிப்பாளரும் நடிகருமான அருண் நாராயணன், நடிகரும் இயக்குநருமான திலீஷ் போத்தன் மற்றும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அனூப் குமார் ஆகியோர் இணைந்து ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸை தொடங்கினர். ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் மலையாளப் படங்களை விநியோகம் செய்வதில் கவனம் செலுத்திய நிறுவனம், டொவினோ தாமஸ் நடித்த ‘நரிவெட்டா’ படத்தை தனது முதல் வெளியீடாக களமிறக்கியது. தொடர்ந்து ஷேன் நிகம் நடித்த ‘பல்டி’ திரைப்படத்தையும் தமிழ்நாட்டில் வெளியிட்டது.
- Advertisement -
கடந்த ஓணம் பண்டிகையையொட்டி துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான ‘லோகா: சேப்டர் 1 – சந்திரா’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்தது. இதனைத் தொடர்ந்து ஜிதின் K. ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ‘களம்காவல்’ படத்தையும் வெளியிட்டது. இரு படங்களுக்கும் கிடைத்த வரவேற்பு, நிறுவனத்தின் விநியோகப் பயணத்திற்கு மேலும் வலுசேர்த்தது.
இந்நிலையில், இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் விநியோகம் செய்கிறது. கிரிஷ் A.D. இயக்கியுள்ள இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றன. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இப்படத்தை இந்நிறுவனம் வெளியிடுகிறது.
இதன் மூலம், கேரளத்திற்கு வெளியே மலையாளத் திரைப்படங்களை விநியோகம் செய்வதில் ‘லோகா’, ‘களம்காவல்’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ என தொடர்ந்து மூன்று படங்களிலும் வெற்றியை பதிவு செய்து ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.
மலையாள சினிமாவுக்கான புதிய சந்தைகளை உருவாக்கி, தரமான படங்களை கேரள எல்லைகளைக் கடந்து இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.