தமிழ் சினிமாவில் வெளியாகவிருக்கும் அடுத்த பெரிய படம் மதராஸி. செப்டம்பர் 5-ந்தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது. ரஜினி, விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா, அமீர்கான் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் முதல்முறையாக சிவகார்த்திகேயனை இயக்கியுள்ளார்.
இடையில் இப்படத்தின் எதிர்பார்ப்பு சற்று குறைவதாக தெரிந்த நிலையில், படத்தின் போஸ்டர்ஸ், கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி மீண்டும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
சிவகார்த்திகேயன் லுக்கில் இருந்து கதாபாத்திரம் வரை அனைத்துமே ‘மதராஸி’ படத்தில் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இருந்தால், கண்டிப்பாக வசூல்ரீதியாக மாபெரும் வெற்றியை இப்படம் பெறும்.
ஒரு முன்னணி கமர்ஷியல் ஹீரோ படம் வெற்றி பெறுவதற்கும், ஸ்மால் பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அவ்வகையில், கோலிவுட் வட்டாரத்தை சார்ந்தவர்கள் பெரிய ஹீரோவின் படங்களை ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர்.
அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தை தவிர வேறு எந்த ஒரு பெரிய ஹீரோவின் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ‘கூலி’ படம் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் 150 கோடியை தொட்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த பெரிய படமாக ‘மதராஸி’ எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.