விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக பிரதீப் நடுத்து முடித்துள்ள ‘டியூட்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார், அஜித் ரேசிங் சென்றுவிட்டார். இனி அவர்களது இடத்தை யார் நிரப்புவார்கள் என நினைக்கிறீர்கள்? என்ற கேள்வி பிரதீப் ரங்கநாதனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘விஜய் சார் மற்றும் அஜித் சார் ஆகியோருடைய இடைவெளியை யாராலும் நிரப்பவோ அல்லது மாற்றவோ முடியாது. அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து இந்த நிலையினை அடைந்திருக்கிறார்கள். ரஜினி சார், விஜய் சார், அஜித் சார் படங்களின் திரைக்கதை எதுவாக இருந்தாலும் ரசிகர்கள் அதனை வெற்றி பெறச் செய்வார்கள்.
ஒரு வேளை 30 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிலையினை யார் அடைவார்கள் என்பது தெரியவரலாம். ஆனால், அதுவும் மக்கள் மற்றும் ரசிகர்கள் கைகளில் மட்டுமே இருக்கிறது’ என்றார். இந்தப் பதில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டியூட்’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தை தமிழகத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார் சாய் அபயங்கர்.