கடைக்குட்டி சிங்கம், நம்ப வீட்டுப் பிள்ளை என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ், சூர்யாவை இயக்கும் வாய்ப்பினை பெற்றார்.
முன்னதாக, சூர்யாவின் தயாரிப்பில் ‘பசங்க-2’ மற்றும் ‘கடைக்குட்டி சிங்கம்’ என இரு படங்களை இயக்கியிருந்தார். இதில் ‘பசங்க-2’ படத்தில் சூர்யாவும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, தன்னை வைத்து படமெடுக்கும் வாய்ப்பினை பாண்டிராஜிற்கு தந்தார் சூர்யா.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா-பாண்டிராஜ் கூட்டணியில் உருவான ‘எதற்கும் துணிந்தவன்’ படம் பெரிய ஹைப்பில் வெளியானது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியினை பெறவில்லை. இது பாண்டிராஜுக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்தது. அன்றைய கஷ்ட நிகழ்வுகள் குறித்து தற்போது பாண்டிராஜ் மனம் திறந்து தெரிவிக்கையில்,
‘கடைக்குட்டி சிங்கம், நம்ப வீட்டுப் பிள்ளை ஹிட்டை தொடர்ந்து பலர் என்னுடன் படம் பண்ண முன் வந்தனர். ஆனால், எதற்கும் துணிந்தவன் படம் சரியாகப் போகவில்லை என்பதால், இனி பேமிலி ட்ராமா படங்கள் எல்லாம் அவ்வளவு தான்.
விக்ரம், ஜெயிலர் போன்ற படங்கள் வர துவங்கிவிட்டது. தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் மாறிவிட்டது. இனி, பாண்டிராஜ் இயக்கும் பேமிலி டிராமா படங்கள் எல்லாம் எடுபடாது என்றார்கள். இந்த மூன்று வருடங்கள் பணரீதியாகவும் மனரீதியாகவும் பல கஷ்டங்கள் இருந்தன. அவமானங்கள், அசிங்கங்கள் நிறைந்து இருந்தன. உதவி இயக்குனராக இருந்தபோது கூட இந்தளவிற்கு கஷ்டங்களை அனுபவிக்கவில்லை.
வெற்றிபெறும்போது, எந்தளவிற்கு கொண்டாடப்படுகின்றோமோ தோல்வி கொடுக்கும்போது, அதே அளவிற்கு அவமானங்களையும் சந்திக்க நேரிடுகின்றது. இதுதான் சினிமா’ என உருக்கமாக கூறினார் பாண்டிராஜ்.
தற்போது இவர் இயக்கிய ‘தலைவன் தலைவி’ படம் 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. மேலும், வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பாண்டிராஜின் அடுத்த படத்தை தயாரிக்கவும், அவரின் அடுத்த படத்தில் நடிக்கவும் பலர் ஆவலாக உள்ளனர். இதான் சினிமா.!