தேவாவின் குரலில் பதிவான கடைசிப் பாடல்… ஜெயில் மேட்ஸ் படத்தின் ‘வா சிவா’ வெளியீடு!

இயக்குநரும் நடிகருமான கே.பி. ஜெகன் இயக்கி நடித்துள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியாகியுள்ளது. மறைந்த இசையமைப்பாளரும் பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் பதிவான கடைசிப் பாடல் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

இப்படத்தில் கே.பி. ஜெகன், விஜய் வர்மா, எம்.எஸ். பாஸ்கர், சனாஷ்கா ஸ்ரீ, மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, ‘உறியடி’ சங்கர், சாய் அபிநயா, வீரசமர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுக. செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். மணிகண்டன் சிவக்குமார் படத்தொகுப்பையும், வீரசமர் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமா என்ற அடையாளத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பசங்க புரொடக்ஷன்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. இப்படத்தின் ஆடியோ உரிமையை வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனம் பெற்றுள்ளது.

- Advertisement -

ஏற்கெனவே வெளியான இப்படத்தின் அறிமுகக் காணொளி மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ‘வா சிவா’ என்ற முதல் பாடலும் அதன் பிரத்யேக வீடியோவும் வெளியாகியுள்ளன. அறிமுகப் பாடலாசிரியர் சக்தி உமா பாலகிருஷ்ணா எழுதியுள்ள இப்பாடலை தேவா பாடியுள்ளார்.

‘எங்கெங்கோ தேடிப் போனேன்… ஏதேதோ நாடி போனேன்… இப்போ நான் ஆடிப் போனேனே… என் அப்பன் சிவனே…’ எனத் தொடங்கும் இப்பாடல், சிவபெருமானிடம் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தும் பக்தனின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. தேவாவின் குரலில் வெளிப்படும் ஆன்மிக உணர்வு பாடலுக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.

மண்ணுலகை விட்டுப் பிரிவதற்கு முன்பு தேவா பாடிப் பதிவு செய்யப்பட்ட கடைசிப் பாடல் இதுவே எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இசை ரசிகர்கள் மத்தியில் இப்பாடல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இப்பாடலில் தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர் சிவனடியாராக நடித்துள்ளார். பாடல் படமாக்கப்பட்டபோது 50-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பங்கேற்றுள்ளனர். அதுமட்டுமின்றி, கொக்கரை, நந்தி சிருங்கி உள்ளிட்ட பாரம்பரிய சிவ வாத்தியங்கள் வரவழைக்கப்பட்டு பிரத்யேகமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

Deva’s Last Recorded Song Vaa Siva from Jail Mates ReleasedJail MatesK.P. JaganMounica SanthoshSanashka Srivijay varma