கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் ஆர்த்தி ரவி – கெனிஷா தொடர்பான சர்ச்சைகள் காட்டுத்தீயாகப் பரவி வந்த நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரு நீண்ட உருக்கமான விளக்கத்தைப் பகிர்ந்துள்ளார். ரவி மோகனுடனான உறவை மறைமுகமாக முறித்துக் கொண்டு, அவர் சென்னையை விட்டே வெளியேறுவதாக அறிவித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக நடிகர் ரவி மோகன் அறிவித்தார். அதன் பிறகு, அவருக்கும் பாடகி கெனிஷாவுக்கும் இடையே காதல் இருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டது. இருவரும் தொடர்ந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும் ஒன்றாகப் பங்கேற்று வந்தனர்.
சமீபத்தில் தரம்சாலாவில் நடைபெற்ற ஒரு கோயில் விழாவில் இருவரும் ஜோடியாகக் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து, ஆர்த்தியின் ஆதரவாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரிடமிருந்து கெனிஷாவுக்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களும், ஆன்லைன் தாக்குதல்களும் எழுந்தன.
தனக்கு எதிராக எழுந்த கடுமையான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக கெனிஷா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
“ஒரு மனிதரைக் காப்பாற்ற என்னையே நான் தியாகம் செய்தேன். ஆனால், இந்த உலகம் உண்மைக்கும் மென்மைக்கும் இடம் தராத ஒன்றாக இருக்கிறது. பொய் சொல்பவர்கள் மற்றும் ஏமாற்றுபவர்களுக்கே இங்கு இடம் உள்ளது.
திரைத்துறையினருக்கும், அவரை நேசிப்பவர்களுக்கும், வெறுப்பவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்… அவர் இனி உங்கள் சொத்து. இனி எந்த விளக்கமும் இல்லை, அவருக்காக நான் போரிடப் போவதும் இல்லை. அவரை முழுமையான விடுதலையுடன் வழியனுப்புகிறேன்.”
இதன் மூலம் ரவி மோகனுடனான பிரேக்-அப்பை அவர் மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடர் இணையவழித் தாக்குதல்கள் மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாக, தனது இசைப் பயணத்தில் இருந்தும், மனநல ஆலோசனை (Therapy) பணியில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாக கெனிஷா அறிவித்துள்ளார். அத்துடன், “பெண்ணியம் வென்றது, மகிழ்ச்சி தோற்றது” என்ற வாசகத்துடன், சென்னையை விட்டு வெளியேறி சமூக வலைதளங்களிலிருந்தும் தற்காலிகமாக விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
கெனிஷாவின் இந்த அதிரடி மற்றும் உருக்கமான பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்தோ அல்லது இந்த சாத்தியமான பிரிவு குறித்தோ நடிகர் ரவி மோகன் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ பதிலும், விளக்கமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.