உணவு கிடைக்காதவர்களுக்கு பிரியாணி என்பது எளிதில் கிடைக்காத ஒன்று! – இயக்குநர் விக்னேஷ் சிவன்

பசியால் வாடும் ஏழை, எளிய மக்களின் துயரைப் போக்கும் நோக்கில், ‘Help on Hunger Foundation’ தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட #ZeroHunger உணவு வழங்கும் நிகழ்வைத் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் மூலம் வீடற்றவர்கள், ஆதரவற்றோர், முதியவர்கள் உள்ளிட்ட 5,000 பேருக்குப் பிரியாணி வழங்கப்பட்டது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், “இன்றைய சூழலில் நம்மில் பலருக்குப் பிரியாணி என்பது விடுமுறை நாட்களில் விரும்பிச் சாப்பிடும் உணவாக மாறிவிட்டது. நான் கல்லூரியில் படித்த காலத்தில், விலை குறைவு என்பதால் பிரியாணியைத் தவிர்த்துவிட்டு குஸ்கா மட்டும் சாப்பிட்டிருக்கிறேன்.

- Advertisement -

ஆனால், ஒருவேளை உணவுகூடக் கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு பிரியாணி போன்ற உணவைச் சாப்பிடுவது என்பது எளிதில் கிடைக்காத வாய்ப்பாக உள்ளது. இதுபோன்ற நல்ல முயற்சியை இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் முன்னெடுத்தபோது, இதில் கலந்துகொள்ள விரும்பினேன்.

ஏழை, எளிய மக்கள், வீடற்றவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள், முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோர் ஆகியோர் இதன் மூலம் பயனடைவதைப் பார்க்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்றதைப் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.

உலக பிரியாணி தினமான அக்டோபர் 11-ஆம் தேதியன்று, ஏழை, எளிய மக்களுக்குச் சுவையான, தரமான மற்றும் ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்ட பிரியாணி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Biryani Is a Luxury for the Hungry - Director Vignesh ShivanVignesh Shivan