ஸ்ரீகாந்த், ஷாம் நடித்துள்ள த்ரில்லர் படம், ‘தி டிரெய்னர்’. இப்படத்தில் ஜூனியர் எம். ஜி. ஆர், பிரின்ஸ் சால்வின், அஞ்சனா கிருத்தி, புஜிதா பொன்னாடா, வாகை சந்திரசேகர், சாய் தீனா, லதாராவ், ஜே. ஆர்.எம்.ராஜ்மோகன், பிரியங்கா ராய் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் பற்றி இயக்குநர் பி.வேல்மாணிக்கம் தெரிவிக்கையில்,
‘பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு போலீஸார் உருவாக்கிய ‘காவலன்’ செயலியில் இருந்து உத்வேகம் பெற்று சமூகத்துக்குத் தேவையான படமாக இது உருவாகியுள்ளது. ஸ்ரீ காந்த், நாய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருடன் ‘லீ’ என்ற நாயும் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது.
ஜூனியர் எம்.ஜி.ஆர், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய செல்வாக்கின் கீழ் குற்றச் செயல்களில் ஈடுபடும் மர்ம கும்பலைச் சுற்றிக் கதை சுழல்கிறது. போலீஸ் அதிகாரி ஷாம், ஸ்ரீ காந்தை குற்றவாளி என்று தவறாக நினைக்கிறார். தன்னை நிரூபிக்க அவர் என்ன செய்கிறார் என்பது கதை. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது’ என கூறியுள்ளார்.
இந்நிலையில், முன்னதாக போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமீனில் உள்ள அவர்கள் இருவர் மீதும் முறைகேடான பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்களை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு ஸ்ரீகாந்த் சார்பில் அமலாக்கத்துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், நடிகர் கிருஷ்ணா அமலாக்கத்துறையின் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரத்துக்கு மேல் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு ஸ்ரீகாந்துக்கு 2-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்மனை ஏற்று ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.