தமிழ் திரையுலகில் நடிகர் கருணாஸ் தனது 25 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்யும் நிலையில், அவர் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் என பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் கருணாஸுக்கு, ‘என்ன விலை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து நடிகர் கருணாஸ் கூறுகையில், “திரையுலகில் நான் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில் ‘என்ன விலை’ திரைப்படம் கிடைத்திருப்பது மறக்க முடியாத அனுபவம். கடந்த 25 ஆண்டுகளாக இப்படியொரு படத்திற்காகவும், இப்படிப்பட்ட படக்குழுவிற்காகவும் காத்திருந்தேன். இயக்குநர் சஜீவ் பழூர் கதை சொன்னவுடன் உடனடியாக நடிக்க சம்மதித்தேன். இது அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான கதை.
விருதுகளும், திரைப்பட விழாக்களில் கிடைக்கும் அங்கீகாரங்களும் ஊக்கமளிக்கின்றன. ஆனால், திரைப்படம் மக்களுக்கானது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, போராட்டங்கள், சுயமரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை பேசும் இப்படம் பார்வையாளர்களின் மனதை நிச்சயம் தொடும்” என தெரிவித்துள்ளார்.
- Advertisement -
தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளனர்.
‘என்ன விலை’ படத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ், விஜயலட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளையும், தபஸ் நாயக் ஒலி வடிவமைப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ள ‘என்ன விலை’, வரும் செப்டம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.