ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனப்பிரச்சினை. இதற்கு பிரதான காரணம், பெரும்பாலும் பணத்தேவை. இத்தகு ‘உஷ்..’ என்ற பெருமூச்சுப் பணத்தேடலில் தீர்வு என்னவாக நிகழ்கிறது? என்பதுதான்ங்க ‘ஏஸ்’ பட கதைக்களம். இப்ப, விமர்சனத்துக்கு வருவோம்..
சிறையில் இருந்து வெளிவரும் விஜய் சேதுபதி, புதிய வாழ்க்கையை தொடங்க மலேசியா செல்கிறார். அங்கு, யோகிபாபு (அறிவு) மூலமாக ‘போல்டு’ கண்ணன் என்ற பெயருடன் கல்பனா (திவ்யா பிள்ளை) ஹோட்டலில் வேலை செய்கிறார்.
இந்நிலையில், தனது வீட்டிற்கு எதிரே குடியிருக்கும்- துணிக்கடையில் வேலை பார்க்கும் ருக்மணி மீது காதல் கொள்கிறார். அவரும் பின்னர் காதலிக்கிறார்.
இதில், ருக்மணியின் வளர்ப்புத் தந்தையும் போலீஸ்காரருமான பப்லு பிரித்விராஜ் பெண் பித்தனாக இருக்கிறார். ருக்மணியை கொடுமைப்படுத்துகிறார்.
இச்சூழலில் காதலியான ருக்மணிக்கு பணப்பிரச்சினை எழுகிறது. மேலும், திவ்யா, யோகிபாபு இவர்களுக்கும் பண நெருக்கடி நேர்கிறது.
இவர்களுக்காக, விஜய் சேதுபதி ‘டான்’ அவினாஷிடம் கடன் பெறுகிறார். அவருடன் சூதாட்டத்திலும் ஈடுபடுகிறார். அதில், விஜய் சேதுபதி ஏமாற்றப்பட்டு பாஸ்போர்ட்டும் பறிக்கப்படுகிறது.
பின்னர், விஜய் சேதுபதி துணிந்து வங்கியில் கொள்ளையடிக்கிறார். அவரிடம் இருக்கும் பெரும்பணத்தைப் பறிக்க அவினாஷ்-பப்லு துரத்துகின்றனர்.
இப்படியாக ஓடும் கதையோட்டத்தில், வில்லனிடமிருந்து பாஸ்போர்ட்டை விஜய் சேதுபதி மீட்டாரா? அழகிய காதலிக்கு கேட்ட பணத்தைக் கொடுத்து மகிழ்வித்தாரா?என்பதே மீதியான கரன்சிக்கதை.
படத்தின் முதல் பாதியில்- கேரக்டர்களை அறிமுகப்படுத்துகிறேன் என நீண்ட நேரம் எடுக்கப்பட்டு, ஃப்ரேம் பை ஃப்ரேம் மெதுவாகவே போகிறது.! இரண்டாம் பாதியில்- ஃபைட், சேசிங், ஆக்சன் ரேஞ்சில் கொஞ்சம் விறுவிறுக்கிறது.
ஹீரோயினாய் அறிமுகமாகி இருக்கும் ருக்மணிக்கு பெரிதாக வேலையில்லை. ஆனாலும், கால் முளைத்த 50 கிலோ மல்லிகைப் பூவாய் கமகமக்கிறார்.
மலேசியாவின் புத்தர் கோவில், முருகர் கோவில் மற்றும் திருவிழாக் காட்சிகளை கரண் பி ராவத் கேமிரா கொள்ளையழகாய் அள்ளித் தந்திருக்கிறது.
ஜஸ்டின் பிரபாகரன் மெட்டில் பாடல்கள் சுமார். சாம் சி எஸ்ஸின் பேக்ரவுன்ட் மியூஸிக் ஒகே.
‘ஏஸ்’ என்கிற ‘போக்கர் கேம்’ படத்துக்கு ஹைலைட் எனலாம். லாஜிக் மீறல்களை யோகிபாபுவின் ஹ்யூமர் டயலாக்ஸ் மறக்கடிக்கிறது. விஜய் சேதுபதியின் ரியாலிட்டி ஃபெர்பாமன்ஸ் சிறப்பு.
சுருக்கமா சொல்லணும்னா, பழைய கதைதான். அதை முழுவதும் மலேசிய பியூட்டியில் ஃபிரஷ்ஷாக முகம் மாற்ற திறமையாய் முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஆறுமுக குமார். சரியாக அமைந்திருந்தால் ஆடியன்ஸ் அகமெல்லாம் மலர்ந்திருக்கும். மிஸ்ஸானது துரதிர்ஷ்டமே.
மொத்தத்தில் படம் எப்டின்னா, ஆக்சனாகவும் தெறிக்காமல், காமெடியாகவும் நிறையாமல், காதலாகவும் நெகிழாமல் அனைத்தும் மிக்ஸாகி ‘கனெக்ட்’ ஆகாமல் போய்விட்டது.
அவ்வகையில், ஏதேதோ எதிர்பார்த்த ரசிகர்கள் ‘உஷ்..’ என நெளிவதையும் பார்க்க முடிகிறது.
'ஏஸ்' திரை விமர்சனம்
- Rating