AIADMK leading in Nanguneri, Vikravandi bypolls
AIADMK leading in Nanguneri, Vikravandi bypolls

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கியது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. புதுச்சேரி காமராஜ்நகரில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் கடந்த 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர்.

அதேபோன்று நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் உள்ளிட்ட 23 பேர் போட்டியிட்டனர். புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவீனா உள்ளிட்ட 9 பேர் போட்டியிட்டனர்.

இடைத்தேர்தலில் வாக்குபதிவானது விக்கிரவாண்டி தொகுதியில் 81.41 சதவீத வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 66.35 சதவீதம் வாக்குகளும், புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் 69.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. இந்நிலையில் இத்தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதை தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவும், காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் -ம் முன்னிலை வகித்து வருகின்றது.

இந்நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி என இரு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகிப்பதால், அதிமுக கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திமுக வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பின்னடைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.