‘நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மைலோ இயக்கியுள்ள ‘நோவா: பேஸ் ஒன் – தி அரைவல்’ (NOVA: Phase One – The Arrival) திரைப்படம், ஹாரர், சயின்ஸ் பிக்ஷன், சூப்பர்நேச்சுரல் ஃபேண்டஸி மற்றும் த்ரில்லர் அம்சங்கள் கலந்த வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக கன்னட நடிகை அத்விதி ஷெட்டி தமிழில் அறிமுகமாகிறார். மேலும் துருவா, கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், ஃபைனலி ஸ்வாதிகா, ஃபைனலி கிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
கடந்த 11 ஆண்டுகளாக கன்னடத் திரையுலகில் பல வெற்றிப் படங்களிலும், விருது பெற்ற படங்களிலும் நடித்துள்ள அத்விதி ஷெட்டி, துளு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். திறமையான நடனக் கலைஞரான இவர், பல நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
‘நோவா’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து அத்விதி ஷெட்டி கூறியதாவது:
“இந்தப் படத்தில் ‘வல்லபி’ என்ற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இதுவரை என் திரைப்பயணத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரம் இதுதான். வலுவான கதாபாத்திரம், அதிக வசனங்கள், உணர்ச்சிகள் நிறைந்த காட்சிகள் என நடிகையாக என்னை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பை இந்த படம் கொடுத்தது.

தமிழ் எனக்குப் புரியும். ஆனால் பேசும் பழக்கம் இல்லாததால் ஆரம்பத்தில் சற்று சவாலாக இருந்தது. படப்பிடிப்பின்போது வசனங்களை விரைவாக கற்றுக்கொண்டு நடித்தேன். குறிப்பாக ஒரு உணர்ச்சிப்பூர்வமான காட்சியில் கிளிசரின் இல்லாமல் நடித்ததற்கு படக்குழுவினர் அனைவரும் கைதட்டி பாராட்டினர். பொதுவாக அழுகைக் காட்சிகளில் நான் கிளிசரின் பயன்படுத்துவதில்லை.
படப்பிடிப்பின்போது என் பாட்டி காலமான செய்தி வந்தது. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாலும், முக்கியமான காட்சியை முடித்துவிட்டு அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முயன்றேன். ஆனால் போக்குவரத்து சிரமங்களால் அவரது முகத்தைக் கூட கடைசியாக பார்க்க முடியவில்லை. அடுத்த நாளே மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பினேன். என் குடும்பத்தினர் அளித்த ஊக்கம்தான் அதற்கு காரணம்.
பெரும்பாலான காட்சிகள் மலை மற்றும் வனப்பகுதிகளில் படமாக்கப்பட்டன. கனமான ராணுவ பூட்ஸ்களை அணிந்து நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. அப்போது தான் நம் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பை இன்னும் அதிகமாக உணர்ந்தேன்.
எனது அறிமுகக் காட்சியே மழைக் காட்சியாக இருந்தது. மூணாரின் கடும் குளிரில் நள்ளிரவு முழுவதும் டேங்கர் தண்ணீரில் 24 மணி நேரம் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது. அது மறக்க முடியாத அனுபவம்.
இயக்குநர் மைலோவின் சினிமா பார்வை மிகவும் புதுமையானது. தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாசமான அறிவியல் புனைகதை அனுபவத்தை ‘நோவா’ வழங்கும் என்று நம்புகிறேன். படக்குழுவினர் அனைவரும் எனக்கு குடும்பம் போல இருந்தார்கள். இந்தப் படம் வெளியான பிறகு தமிழில் மேலும் பல நல்ல படங்களில் நடிக்க ஆவலாக இருக்கிறேன்.” என்று கூறினார்.
