நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷுடன் நடிக்கிறேன் – வடிவேலு மகிழ்ச்சி!

நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார்.
தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணைவதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Sithara Entertainments நிறுவனத்தின் நாக வம்சி, Primark Productions நிறுவனத்தின் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios நிறுவனத்தின் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மாரனாடு கருப்பணசாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையுடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கின. படக்குழுவினர் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு, பொதுமக்களின் பெரும் திரளான பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு கிடா விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்வில் பேசிய நடிகர் வடிவேலு, மாரனாடு கருப்பணசாமி கோயிலின் சிறப்பையும், படத்தின் பூஜை விழாவுக்கு திரண்ட மக்களின் அன்பையும் பாராட்டினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், இது சாதாரணமான திரைப்படம் அல்ல என்றும், அரசியல் சார்பு இல்லாத தனித்துவமான கதையைக் கொண்ட படம் என்றும் வடிவேலு கூறினார். படத்தின் கதை தன்னை பெருமைப்படவும் ஆச்சரியப்படவும் வைத்ததாகக் குறிப்பிட்ட அவர், படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், படத்தின் தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், வழக்கமாக சென்னையில் நடைபெறும் திரைப்பட பூஜையை மண்ணின் தெய்வமான கருப்பசாமியின் அருளுடன் இங்கு நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

தமிழரசன் பச்சமுத்து சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர் என்றும், ‘லப்பர் பந்து’ படத்திலேயே அவரது திறமை வெளிப்பட்டதாகவும் அவர் கூறினார். D56 படத்திலும் அவர் மிகச்சிறப்பாக பணியாற்றியிருப்பதாகவும், நம்முடைய மண்ணின் கதையை அழகாக உருவாக்கியுள்ளதாகவும் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்தார்.
மேலும், படத்தில் தனுஷ், வடிவேலு, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் இணைந்துள்ளதாகவும், சாய் அபயங்கர் இசையமைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நடிகர் தனுஷ் பேசுகையில், இந்த பூஜை தெய்வத்தின் மீதும், இங்கு திரண்டுள்ள மக்கள் மீதும் வைத்துள்ள நம்பிக்கையுடன் நடைபெறுவதாக தெரிவித்தார். அதிகம் பேச விரும்பவில்லை என்றும், அனைவரும் கிடா விருந்தில் வயிறார சாப்பிட்டு பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், விரைவில் ‘ஓம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்களை சந்திப்பதாகவும், பூஜை நிகழ்வில் கலந்து கொண்டு அன்பையும் ஆதரவையும் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இப்படத்தில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, ப்ரீத்தி முகுந்தன், விஜய்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி, சாய் அபயங்கரின் இசை மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணி என பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள D56 படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
