ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ – தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை!

ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாகக் கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா (SIFF 2026)-வில் தமிழ் திரைப்படமான ‘காளிதாஸ் 2’ தேர்வாகி திரையிடப்பட்டிருப்பது தமிழ் சினிமாவுக்கு பெரும் கவனத்தை பெற்றுத்தந்துள்ளது.
ஜூன் 12 முதல் 21 வரை சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற இந்த விழாவின் சிறப்பு திரையிடல்கள் ஜூன் 28 வரை நகரின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன. உலகம் முழுவதிலிருந்தும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் இந்தியாவிலிருந்து தேர்வான 7 படங்களில் ஒன்றாக ‘காளிதாஸ் 2’ இடம் பெற்றுள்ளது. அதில் தென்னிந்தியாவிலிருந்து தேர்வான ஒரே திரைப்படம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காளிதாஸ் 2’, பரத் நாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் அஜய் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சங்கீதா, பவானி ஸ்ரீ, அபர்ணிதி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பை கவனித்துள்ளார். அரவிந்த் ஆனந்த் கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார்.
ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருப்பது, இப்படத்தின் கலைத்திறன் மற்றும் தொழில்நுட்ப தரத்திற்கு கிடைத்த முக்கியமான சர்வதேச அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இது தமிழ்ச் சினிமாவின் உலகளாவிய பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
