ரைசா வில்சன் நடிக்கும் ஹாரர் சயின்ஸ் பிக்சன் திரில்லர் ‘நோவா’

Web Ads

ஆதி மற்றும் ஹன்சிகா மோத்வானி நடித்த ‘பார்ட்னர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘நோவா: பேஸ் ஒன் – தி அரைவல்’ (NOVA: Phase One – The Arrival).

இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட மிலோ, இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்.

ஹாரர், சயின்ஸ் பிக்சன், சூப்பர்நேச்சுரல் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘நோவா’வில், ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். அவருடன் துருவா, அத்விதி ஷெட்டி, கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு தயாராகி வருகிறது.

படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரைசா வில்சன் கூறுகையில், “ஒரு கதைக்குள் இன்னொரு கதை சொல்லும் பாணியில் ‘நோவா’ உருவாகியுள்ளது. ஃப்ளாஷ்பேக் பகுதிகளில் முக்கியமான கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். ஆக்சன், த்ரில்லர் மற்றும் சயின்ஸ் பிக்சன் அம்சங்கள் கலந்த இந்தக் கதையில் இதற்கு முன் நான் நடித்ததில்லை. அதுவே இந்தப் படத்தை தேர்வு செய்ய முக்கிய காரணமாக அமைந்தது,” என்றார்.

மேலும், கேரளாவின் மறையூர் சந்தனக்காடுகளில் நடைபெற்ற படப்பிடிப்பு அனுபவத்தை பகிர்ந்த அவர், “மழை, பனி, சேறும் சகதியுமான பாதைகள், வனவிலங்குகளின் சத்தங்கள், இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் என பல சவால்களுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடைபெற்றது. ஆனால் இயக்குநர் மிலோ படப்பிடிப்புத் தளத்தை எப்போதும் உற்சாகமாக வைத்திருந்ததால் அந்த சிரமங்கள் பெரிதாகத் தெரியவில்லை,” எனக் குறிப்பிட்டார்.

ஆக்சன் காட்சிகளுக்காக விமல் ராம்போ மாஸ்டரிடம் சிறப்பு பயிற்சி பெற்றதாகவும், முன்பே ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்திற்காக சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த அனுபவம் இந்தப் படத்தில் உதவியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் வரவேற்பு தனது திரைப்பயணத்திற்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளதாக கூறிய ரைசா, ‘காதலிக்க யாருமில்லை’ மற்றும் ‘சேஸ்’ போன்ற படங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், ‘நோவா’ உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து வெளியாகும்போது புதிய வாய்ப்புகள் தன்னைத் தேடி வரும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

வித்தியாசமான கதை, சவாலான படப்பிடிப்பு மற்றும் புதிய அனுபவங்களை தாங்கி வரும் ‘நோவா: பேஸ் ஒன் – தி அரைவல்’, தமிழ் சினிமாவில் புதிய ஹாரர் சயின்ஸ் பிக்சன் அனுபவத்தை வழங்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Raiza Wilson Starrer Horror Sci-Fi Thriller Nova Gears Up for Release
Raiza Wilson Starrer Horror Sci-Fi Thriller Nova Gears Up for Release