நடிகர் மணிகண்டன் நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!

Web Ads

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஆர். ராகேஷ். ரைனோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படம் தற்போது திரையுலகில் கவனம் ஈர்த்துள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித் தலைமையிலான நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக பணியாற்றியுள்ள ஆர். ராகேஷ், ‘கபாலி’, ‘காலா’, ‘பைசன்’ உள்ளிட்ட முக்கியமான திரைப்படங்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவின் படைப்புத் தன்மையையும், தரமான உள்ளடக்கத்தின் அவசியத்தையும் ஆழமாக புரிந்துள்ள அவர், தற்போது தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை மிகப்பெரிய கனவுகளுடன் தொடங்கியுள்ளார்.

அவரது தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தில் நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கிறார். இயல்பான நடிப்பாலும், தனித்துவமான கதைத்தேர்வுகளாலும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள மணிகண்டன், தொடர்ந்து தரமான வெற்றி படங்களை வழங்கி வரும் நிலையில், இந்த புதிய கூட்டணி மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

‘குட் நைட்’, ‘குடும்பஸ்தான்’ போன்ற வெற்றி திரைப்படங்களின் வரிசையில் இணையும் வகையில், இந்த புதிய படமும் உணர்வுகள் நிறைந்த கதைக்களம், நவீன திரைக்கதை மற்றும் பிரம்மாண்டமான திரை அனுபவத்துடன் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக தொடங்க உள்ள நிலையில், இயக்குநர், நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது.

உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தலைமுறை தமிழ் திரைப்படங்களில், இந்த படம் மேலும் ஒரு முக்கியமான மற்றும் பேசப்படும் படைப்பாக மாறும் என்ற எதிர்பார்ப்பு தற்போது திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் அதிகரித்துள்ளது.