தீண்டாமை செயல் என வெளியான வதந்திகளுக்கு நடிகர் யோகி பாபு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. டாப் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வரும் இவர் கதாநாயகனாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கும் யோகி பாபு பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இப்படி எப்போதும் பிசியான நடிகராக வலம் வரும் இவர் முருகன் மீது அதீத பக்தி கொண்டவர் என்பதால் அடிக்கடி கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சிறுவாபுரியில் உள்ள முருகன் கோயிலுக்கு சாமியை தரிசனம் செய்ய சென்றிருந்த யோகி பாபு அங்கிருந்த அர்ச்சகருக்கு கை கொடுத்தார். ஆனால், அந்த அர்ச்சகரோ, யோகிபாபுவுக்கு கை கொடுக்க மறுத்துவிட்டு வெறும் கையை மட்டும் அசைத்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலான நிலையில் பலர் யோகிபாபு தீண்டாமையை எதிர்கொண்டதாக சர்ச்சையை கிளப்பி வந்தனர்.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு இந்த சர்ச்சையை குறித்து அளித்திருக்கும் விளக்கம் வைரலாகி வருகிறது. அதில் அவர், “12 வருடங்களுக்கு மேலாக சிறுவாபுரி கோவிலுக்கு சென்று கொண்டு தான் இருக்கிறேன். எனக்கு அந்த அர்ச்சகரை அப்போதிலிருந்தே தெரியும். அவர் ரொம்ப நல்ல மனிதர். யாரோ வேண்டுமென்றே இப்படி தவறான வதந்தியை பரப்பி வருகின்றனர். இதில் சாதி எல்லாம் பார்க்க வேண்டாம். அர்ச்சகரால் எந்த தீண்டாமையும் நடக்கவில்லை. அவர்கூட நான் கைக்குலுக்கப் போகவே இல்லை. டாலர் பத்திதான் விசாரித்தேன். அந்த வீடியோவை நல்லா பார்த்தாலே இது தெரியும்.” என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.