
ஆஸ்கர் விருது இறுதிச்சுற்றில் ‘அனுஜா’ படம் தேர்வு: கதைக்களம் என்ன தெரியுமா?
விருது வழங்குதல் என்பது ஒரு கலைஞனை ஊக்கப்படுத்துதல், மேலும் படைப்புக்கான அங்கீகாரம் ஆகும். விருது வராமல்போயினும், மக்களால் கொடுக்கப்படும் வரவேற்பு, ஒரு கலைஞனுக்கும் படைப்புக்கும் பெருமதிப்பு தான்.
இத்தகு உலகத்திரை வரலாற்றில் 97-வது ஆஸ்கர் விருதுகள் விழா வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் ‘அனுஜா’ என்ற இந்திய குறும்படம் லைவ் ஆக்சன் ஷார்ட் பிலிம் பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவிலிருந்து ஆஸ்கர் ரேசில் பங்கேற்ற ‘லபடா லேடிஸ்’ தேர்வாகவில்லை. இதேபோல, மிகவும் எதிர்பார்த்த ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ என்ற திரைப்படமும் தேர்வு செய்யப்படவில்லை.
மொத்தம்180 குறும்படங்களுடன் போட்டியிட்டு ‘அனுஜா’ குறும்படம் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ஆடம் ஜே கிரேவ்ஸ் இயக்கத்தில், குழந்தை தொழிலாளர்களின் பிரச்சினையை, கதைக்களமாக கொண்டு இக்குறும்படம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்திய அளவில் ஆஸ்கர் பட்டியலில் எந்த பிரிவிலும் எந்த படமும் இடம் பெறவில்லை. இந்நிலையில், இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக ‘அனுஜா’ படம் தற்போது ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இணைந்துள்ளது. இந்தப் படத்தை குனீத் மோங்கா கபூர் தயாரித்துள்ளார். மேலும், நடிகை பிரியங்கா சோப்ராவும் இந்த குறும்படத்தின் தயாரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ளார்.
இந்த குறும்படம் இந்தியாவின் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் கனவை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
‘அனுஜா’ குறும்படம் சர்வதேச அளவில் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ள விஷயத்தை பேசியுள்ளது. அதாவது, தன்னுடைய அக்கா பாலக்குடன் ஒரு பின்தங்கிய ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் 9 வயது சிறுமியின் வாழ்க்கையை இந்த குறும்படம் பேசுகிறது. அவரது குடும்பத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வாழ்க்கையையே மாற்றும் ஒரு முடிவு குறித்தும் இந்த குறும்படம் அடுத்தடுத்த காட்சிகளில் கூறுவதாக அமைந்துள்ளது.
