Web Ad 2

சிம்பொனி இசை என்றால் என்ன?

இளையராஜா ‘வேலியன்ட்’ என்ற பெயரில் ‘சிம்பொனி’ இசைத் தொகுப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இவ்வகையில், மொசார்ட், பீத்தோவன் வரிசையில் இடம்பெற இருக்கிறார்.

இந்தியாவிலிருந்து முதன்முறையாக சிம்பொனி இசைத் தொகுப்பை இன்று லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் அரங்கேற்றுகிறார். இந்நிலையில், சிம்பொனி இசை பற்றிய தகவல்கள் அறிவோம்.

* சிம்பொனி (symphony) என்பது மேற்கத்திய செவ்வியல் இசை (Classical music) மரபில், பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஓர் ஒத்திசைத் தொகுப்பு.

* இந்த இசைத்தொகுப்பு, பல பகுதிகளை, பெரும்பாலும் நான்கு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். இந்தப் பகுதிகள் movements என்று குறிப்பிடப்படுகின்றன. அதில், ஒரு பகுதி சொனாடா என்ற வடிவத்தில் இருக்கும். சிம்பொனிகளுக்கு என மிகத் தெளிவான விதிகளும் கட்டுப்பாடுகளும் உண்டு.

* ஒரு சிம்பொனி 30 முதல் 100 இசைக்கலைஞர்களைக் கொண்டு இசைக்கப்படும் ஒரு நிகழ்வாக இருக்கும். இதில் வயலின், செல்லோ போன்ற தந்திக் கருவிகள், ட்ரம்பட், புல்லாங்குழல், க்ளாரினெட், சாக்ஸபோன் போன்ற காற்றால் இசைக்கப்படும் கருவிகள், தாள இசைக் கருவிகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

* ஐரோப்பிய இசை வரலாற்றில் செவ்வியல் இசையின் காலகட்டமாகக் கருதப்படும் 1740 – 1820 காலகட்டத்தில் சிம்பொனிகள் உருவாகத் துவங்கியதாக பிரித்தானியா கலைக்களஞ்சியம் தெரிவிக்கிறது. ஜோசப் ஹைடன், மொசார்ட், பீத்தோவன் ஆகியோர் மிகச் சிறந்த சிம்பொனி தொகுப்புகளை உருவாக்கியவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

* இளையராஜா, Valiant என்ற பெயரில் ஒரு சிம்பொனியை உருவாக்கியிருக்கிறார். இதனைத் தான் உருவாக்கிய முதல் சிம்பொனி எனக் குறிப்பிடுகிறார் இளையராஜா.

* இந்த சிம்பொனி லண்டனின் Royal Philharmonic Orchestra மூலம் இசைக்கப்பட்டு, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது.இந்தப் பதிவு, இன்று மார்ச் 8 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

* சிம்பொனிகள் மிகச் சிக்கலான இசை வடிவமாககக் கருதப்படும் நிலையில், இதனை 34 நாட்களில் எழுதி முடித்ததாக இளையராஜா தெரிவித்திருக்கிறார்.

* ஆசியாவிலிருந்து சிலர் சிம்பொனிகளை உருவாக்கியிருந்தாலும், இந்தியர் ஒருவர் இதுவரை சிம்பொனிகளை உருவாக்கியதில்லை. இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிறு சிறு இசைத் தொகுப்புகளை சிலர் சிம்பொனி என அழைத்தாலும், அப்படி அழைப்பது சரியல்ல என தன்னுடைய பேட்டிகளில் சுட்டிக்காட்டுகிறார் இளையராஜா.

* சிம்பொனிகளுக்கென உள்ள விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்படுவதை மட்டுமே சிம்பொனி எனக் குறிப்பிட வேண்டும் என்கிறார் அவர்.

* சிம்பொனிகளை இசைக்க, மேற்கத்திய இசையை ஒத்திசைந்து இசைக்கக்கூடிய சுமார் 100 தேர்ந்த இசைக் கலைஞர்கள் தேவை. சிம்பொனிகள் இறுதியாக பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக, பல முறை அவை வாசிக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்படும்.

* ஆகவே, அதற்கென வடிவமைக்கப்பட்ட அரங்கங்கள் தேவை. சிம்பொனிகளை இசைக்கக்கூடிய சில இசைக் குழுக்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், புதிதாக சிம்பொனி ஒன்றை உருவாக்கியுள்ள நிலையில், அதனை தேர்ச்சிபெற்ற மேற்கத்திய இசைக் கலைஞர்களை வைத்தே லண்டனில் பதிவு செய்ததாகத் தெரிவிக்கிறார் இளையராஜா.

* 1986 ஆம் ஆண்டில் How to Name It? என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டார் இளையராஜா. இதில் மொத்தம் பத்து ட்ராக்குகள் (tracks) இடம்பெற்றிருந்தன. இளையராஜாவின் முதல் ஃப்யூஷன் ஆல்பமாக (fusion album) இது வெளியானது.

* 1988 ஆம் ஆண்டில் Nothing but Wind என்ற ஆல்பத்தை வெளியிட்டார் இளையராஜா. மேற்கத்திய செவ்வியல் இசை, இந்திய நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி ஆகியவற்றை இணைத்து இளையராஜா உருவாக்கியிருந்த இந்த இசைத் தொகுப்பை வாசித்திருந்தவர், புகழ்பெற்ற புல்லாங்குழல் இசைக் கலைஞரான ஹரி பிரசாத் சௌராசியா.

* 1993 ஆம் ஆண்டில் இளையராஜா ஒரு சிம்பொனியை உருவாக்கியதாக செய்திகள் வெளியாயின. ஆனால், அதிகாரபூர்வமாக அந்தத் தொகுப்பு வெளியாகவில்லை.

* 2005 ஆம் ஆண்டில் திருவாசகத்தை மேற்கத்திய இசைக் கருவிகளின் இசையோடு வெளியிட்டார் இளையராஜா. புடாபெஸ்ட் நகரில் புடாபெஸ்ட் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா இதனை இசைத்து, பதிவு செய்யப்பட்டது. இது oratorio வகையைச் சேர்ந்தது.

ஆம், இந்தியமே மகிழும், இவ்வுலகே புகழும் ராஜாவின் சிம்பொனியாலே.!

what is special about illaiyaraaja symphony
what is special about illaiyaraaja symphony