“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரைப் பிரிவதாக நடிகை மவுனி ராய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Web Ads

பாலிவுட் திரையுலகிலும் இந்திய சின்னத்திரையிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் மவுனி ராய் (Mouni Roy), தனது கணவர் சுராஜ் நம்பியாரை விட்டுப் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக இவர்களது விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு இந்த அறிக்கை தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

பிரபல ‘நாகினி’ தொடர் மூலம் இந்திய அளவில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் மவுனி ராய். இவர் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியார் என்பவரைக் காதலித்து, கடந்த 2022-ஆம் ஆண்டு கோலாகலமாகத் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சமீபத்தில் மவுனி ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கணவர் சுராஜ் நம்பியாருடன் இருந்த புகைப்படங்கள் அனைத்தையும் திடீரென நீக்கினார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், இருவருக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்றும், அவர்கள் பிரியப் போவதாகவும் செய்திகளைப் பரப்பத் தொடங்கினர்.

தற்போது எழுந்துள்ள இந்த சர்ச்சை குறித்து மவுனி ராய் மற்றும் சுராஜ் நம்பியார் ஆகிய இருவரும் இணைந்து ஒரு கூட்டு விளக்க அறிக்கையை வெளியிட்டு, தங்களது பிரிவை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

“நாங்கள் இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இந்த விஷயங்களைத் தனிப்பட்ட முறையிலும் சுமுகமாகவும் கையாள்வதற்குக் கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

எங்களைப் பற்றிய கற்பனையான கதைகள் மற்றும் அப்பட்டமான பொய்களைப் பரப்புவதன் மூலம், எங்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பரபரப்பாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், ஆழமான சிந்தனைக்குப் பிறகே பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் தனித்தனி பாதைகளில் முன்னோக்கிச் செல்ல நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.”

தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளியுங்கள்:

மேலும் தங்களது நட்பு என்றும் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ள அவர்கள், “வரும் காலங்களிலும் எங்களது நட்பைப் போற்றுவதற்கு முயற்சிப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் உங்களது புரிதலுக்கும், எங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு நீங்கள் அளிக்கும் மரியாதைக்கும் மனமார்ந்த நன்றி” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சினிமா வட்டாரத்தில் மிகவும் ரசிக்கப்பட்ட இந்த ஜோடி, திருமணமான நான்கே ஆண்டுகளில் பரஸ்பர புரிதலுடன் பிரிவதாக அறிவித்திருப்பது அவர்களது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.