நடிகர் விஜய் சேதுபதி தனியார் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி தோல்வி குறித்து அட்டகாசமான கருத்துக்களை பகிர்ந்து மாணவர்களை வியக்க வைத்துள்ளார்.

கோலிவுட் திரையுலகில் ரசிகர்களால் அன்போடு மக்கள் செல்வன் என்று அழைக்கப்பட்டு வரும் முன்னணி நடிகர் தான் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தனது பேச்சு மற்றும் நடிப்பு திறமையால் பல படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். மேலும் மற்ற ஹீரோக்களை போல் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன் கதாபாத்திரத்தையும் மிரட்டலாக நடித்து அனைவரையும் அசத்தி வருகிறார். இவ்வாறு தனித்துவமாக விளங்கும் விஜய் சேதுபதி அண்மையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடம் உரையாடி இருக்கிறார் அது தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், இந்த உலகில் யாரும் யாரிடமும் தோற்றுப்போவதில்லை. யாரும் யாரையும் வெற்றி கொள்வதும் இல்லை. அது அந்த சமயத்தில் நடக்கும் ஒரு சிறிய நாடகம் மட்டுமே என்றார் அறிவை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது கேட்பது. பிறர் பேசுவதை முதலில் அதை நாம் நன்றாக கவனித்து கேட்க வேண்டும். பள்ளி, கல்லூரி எல்லாம் அதை தான் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றன. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பாடங்கள் எல்லாம் யாரோ ஒருவர் படித்து, புரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கு பாடமாக ஆக்கியது தான். அவ்வாறு நாம் படிக்கும் பாடங்களை நம் அறிவைக் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும்.

அதற்கு பெயர் தான் பகுத்தறிவு. அது கடவுளாக இருந்தாலும், சக மனிதனாக இருந்தாலும் அல்லது யாராக இருந்தாலும் சரி, கருத்தைப் பாருங்கள், கருத்து சொன்னவரை பார்க்காதீர்கள். கருத்து உங்களுக்கு பயன்படுகிறதா என்பதை மட்டும் பாருங்கள். புரிந்து கொள்ளும் திறன் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். கண்ணதாசன் சொன்னது போல் ‘தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா’ என்ற பாடலின்படி, தன்னை உணர்ந்து கொள்வது தான் மிக முக்கியம். நாம் தான் சிறந்த புத்தகம். என்று சுவாரசியமான கருத்துக்களை பகிர்ந்து மாணவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.