Vaiko Press Release – சென்னை: “இடைநிலை ஆசிரியர்களின் ‘சமவேலைக்கு – சமஊதியம்’ என்ற கோரிக்கையை தமிழக அரசும், பள்ளி கல்வித்துறையும், நிறைவேற்ற வேண்டும்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘சென்னை டி.பி.ஐ. வளாகத்தில், சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து 2000-க்கும் மேற்பட்ட,
இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் கடந்த டிசம்பர் 23-ம் தேதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 200- க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்காமல், தமிழக அரசு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது’ இவ்வாறு அறிக்கையில் கூறியிருந்தார்.
மேலும், ஒரே கல்வித் தகுதி , ஒரே பணி, ஆனால் இருவேறு ஊதிய விகிதங்கள் போன்ற இந்த முரண்பாட்டைக் களைய வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இதுபோல, 2016 ஆம் ஆண்டில், 8 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, “ஊதிய முரண்பாடுகள் களையப்படும்!” என்று உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த நிலை தொடர்ந்து, அப்படியே இருப்பதால், இதனை களைய வேண்டும் என்று கோரி தற்போது மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்டுள்ளனர்.
“இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு, சம ஊதியம் என்ற நியாயமானக் கோரிக்கையை நிறைவேற்ற உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள முன்வரவேண்டும் ” இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.