தலைவர் 170 திரைப்படத்தில் விக்ரமுக்கு பதிலாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் பிரபல நடிகர் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.

இதனை நிறைவு செய்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது 170 ஆவது திரைப்படத்தில் நடிக்க கவனம் செலுத்த இருக்கிறார். இப்படத்தை ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் டிஜே ஞானவேல் ராஜா இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பையும் படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டாக தலைவர் 170 திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் தற்போது படக்குழு நடிகர் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடிகர் அர்ஜுன் தற்போது விஜயின் லியோ திரைப்படத்தில் நடித்து வருவதால் அவரது கால்சீட்டிற்காக படக்குழு காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்படம் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருவதோடு இந்த தகவல் இணையத்தில் வைரலாகியும் வருகிறது.