
Tamilnadu Lokayukta – சென்னை: “தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது”.
தமிழக அரசு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது,”தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது, அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அமைப்பு தான் லோக் ஆயுக்தா.
இந்த லோக் ஆயுக்தாவில் செயலாளர், இயக்குநர், சார்பு செயலாளர், பதிவாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 26 பணியிடங்களுக்கான தகுதி வாய்ந்த நபர்களை லோக் ஆயுக்தாவின் தலைவர் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், லோக் ஆயுக்தாவின் சட்ட விதிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது, அதாவது:
‘இந்த அமைப்பில் தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இந்த 4 பேரில் இரண்டு பேர் நீதித்துறையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் முதல்வர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள், அப்படி தேர்வானவர்கள் கவர்னரால் அதிகாரபூர்வமாக நியமிக்கப்படுவார்கள்.
மேலும், பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஊழல் தடுப்பு மற்றும் பொது நிர்வாகத்தில் 25 ஆண்டு அனுபவம் கொண்ட நபர் லோக் ஆயுக்தா தலைவராக இருக்க தகுதி உடையவர் ஆவார்’.
அதுமட்டுமின்றி, ‘லோக் ஆயுக்தா தலைவராக இருப்பவர் எந்த குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக இருக்கக்கூடாது, மற்றும் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கக்கூடாது.
தலைவர் பதவிக்கு வருபவருக்கு, குறைந்தபட்சம் 45 வயதும் அதிகபட்சமாக 70 வயதும் இருக்க வேண்டும் . மேலும், இவர்களின் பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும்’ .
மேலும், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான புகார்களை லோக் ஆயுக்தாவின் விசாரணை பிரிவு புலனாய்வு செய்யும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோக் ஆயுக்தா பரிந்துரை செய்யும்.
லோக் ஆயுக்தா பரிந்துரைப்படி, குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர் மீது அரசும், சட்டமன்ற உறுப்பினர் மீது சபாநாயகரும் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.
மேலும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சரும், முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டிற்கு ஆளுநரும் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.
மேலும், தவறான புகார் கொடுப்பவர்களுக்கு லோக் ஆயுக்தா அதிகபட்சம் ஒரு ஆண்டு சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.