P.T Selvakumar About Sterlite Verdict

Sterlite Verdict : 13 பேரின் உயிர் தியாகத்துக்கு கிடைத்த பரிசு இது தானா? – ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பால் தன்னுடைய கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் கலப்பை மக்கள் இயக்கத் தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி செல்வகுமார்.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையால் சுட்டு கொன்ற 13 பேர் உயிர்களுக்கு இவ்வளவுதான் மதிப்பா? ஸ்டெர்லைட் ஆலை, மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது என்று சொன்னதுடன் அந்த ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 13 பேர் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். மக்களின் கடும் கொந்தளிப்பை கண்ட அரசு உடனடியாக ஆலையை இழுத்து மூடி சீல் வைத்தது. ஆனால் எதற்காக சீல்? இந்த துப்பாக்கி சூட்டை நடத்த சொல்லி உத்தரவிட்டது யார் என்று இதுவரை விடையே தெரியாத நிலையில், திரும்பவும் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு அளித்திருப்பது வேதனை அளிக்கிறது.

அப்படியானால், எதற்காக தமிழக அரசு ஆலைக்கு சீல் வைத்தது ஏன்? பொதுமக்கள் விருப்பம் எதற்காக? முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் கருத்து கேட்டது எதற்காக? என தெரியவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும் சென்று, பொது மக்களின் விருப்பத்தை எதற்காக கேட்டார்கள் என்று தெரியவில்லை. சென்னையில் உள்ள மாநில பசுமைத் தீர்ப்பாயத்திலும் கூட்டம் நடத்தி, அரசியல் கட்சியினர், ஸ்டெர்லைட் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுவினரிடம் கருத்துக்களை பெற்றது என்ன ஆனது என்றும் தெரியவில்லை.

ஆனால் ஆய்வறிக்கையில் மட்டும், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உரிய முறையில் நோட்டீஸ் கொடுக்காமல் மூடப்பட்டுள்ளது . தற்போது ஆலையில் கழிவுகளை முறையாக அகற்றுவதோடு, 10 நாட்களுக்கு ஒருமுறை நிலத்தடி நீரை ஆய்வு செய்ய வேண்டும். ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்கலாம்” என்று இறுதியாக பரிந்துரைத்த போதே பசுமை தீர்ப்பாயத்தின் முடிவு மக்களுக்கு ஓரளவு தெரிந்துவிட்டது.

மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை வாதாட விடாமல் தடுத்தபோது அது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. எல்லாரும் அறிவிலிகளா? ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க இப்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

13 பேரின் உயிர்தியாகத்தினை பசுமை தீர்ப்பாயம் நொறுக்கி தள்ளி தீர்ப்பை அளித்துள்ளது. இதற்கு எதற்கு இத்தனை நாள் ஆயிற்று? எதற்காக இத்தனை ஆய்வுகள்? அப்படியானால் மனித உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் இந்த ஆலையினால் தீங்கு வருகிறது என்று சொல்லிய போராடிய மக்கள் அறிவிலிகளா? பாதுகாப்பு வழங்க வேண்டுமா? படுகொலை செய்யப்பட்ட 13 உயிர்களின் மதிப்புக்கு என்னதான் மரியாதை? அவர்களை கொன்று இந்த ஆலையை திறக்க வேண்டுமா என்பன போன்ற கேள்விகள் திரும்பவும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இது எல்லாவற்றிற்கும் மேலாக அப்பாவி உயிர்களை சுட்டு கொல்லப்பட்டபோது வழங்காத பாதுகாப்பு, இப்போது ஆலையை திறக்கும் போது மட்டும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதை என்னவென்று சொல்வது??? இவ்வாறாக பி.டி செல்வகுமார் அவர்கள் கொந்தளிப்புடன் தன்னுடைய கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.